தேசிய மக்கள் சக்தி (ஜே. வி. பி.) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்கவுக்கு வடக்குக்கு சென்று வாக்குக் கேட்கும் தகுதி இல்லையென்று சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருக்கின்றது. இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் தங்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கருதுகின்றதா? அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் மும்முனைப் போட்டி தீவிரமடைந்திருக்கின்றது. கணிப்புகளில் அநுரகுமார திஸநாயக்க முன்னணி வகிக்கக்கூடிய வேட்பாளராகவே நோக்கப்படுகின்றார்.
இந்த நிலையில் ஏனைய வேட்பாளர்களின் கவனம் முழுவதும் அநுரவின் பக்கமாகவே சென்றிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் அநுரவுக்கு வடக்கு மக்களிடம் வாக்குக் கேட்கும் தகுதி இல்லையென்று சஜித் தரப்பு கூறுகின்றது. அநுரவுக்கு மட்டுமல்ல – மாறாக எந்தவொரு பிரதான வேட்பாளர்களுக்கும் வடக்கு மக்களின் வாக்குகளைக் கோரும் தகுதி இல்லை. அப்படியிருப்பதாக அவர்கள் கருதிக்கொள்வதற்கு பிரதான காரணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பலவீனமான அரசியல் செயல்பாடுகள்தான். முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் தமிழ் மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கே வாக்களித்திருந்தனர்.
அவ்வாறு வாக்களிக்குமாறுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூறியது. அன்றைய சூழலில் ராஜபக்ஷக்களை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்களின் வாக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதன்போது, மைத்திரிபால சிறிசேன மட்டுமே, தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், அவரும் தமிழ் மக்களை ஏமாற்றினார். இந்தப் பின்புலத்தில் இப்போது சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் அரசுக் கட்சியினர் – முக்கியமாக சுமந்திரன் குழுவினர் கூறுகின்றனர். ஏன் வாக்களிக்க வேண்டுமென்று கேட்டால், இப்போது இனவாதம் தெற்கில் தலைதூக்கவில்லை. எனவேதான் இருப்பவர்களில் ஒருவரை ஆதரிக்கும் முடிவை தமிழ் அரசுக்கட்சி எடுத்திருக்கின்றது என்கின்றார்.
முன்னர் ரணிலுக்கு நற்சான்றிதழ் கொடுத்தது போன்று – இப்போது சஜித் பிரேமதாஸவுக்கு நற்சான்றிதழ் வழங்குகின்றார். ஆயிரத்து நூறு விகாரைகள் சஜித்தின் திட்டமில்லையாம் – அது ஒரு போலியான தேர்தல் விஞ்ஞாபனமாம் – அதனை இப்போதுதானாம் தாங்கள் கண்டு பிடித்திருக்கின்றார்களாம். எப்படியெல்லாம் சொந்த மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர். இன்று அதிகாரப் போட்டியில் ஈடுபடுகின்ற எந்தவொரு பிரதான வேட்பாளர்களுமே தமிழ் மக்களின் வாக்குகளை கோரும் தகுதியடையவர்கள் அல்லர். ஏனெனில் எவருமே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லர். வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக செயல்பட்டவர்கள் அல்லர். நம்புங்கள் – நம்புவது மட்டும்தான் உங்களின் பணி – இப்படித்தான் ஒவ்வொரு வேட்பாளர்களும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றிருக்கின்றனர் – பெற்றிருக்கின்றனர் என்பதை விடவும் அபகரித்திருக்கின்றனர் என்று கூறுவதுதான் சரியானது. இந்தப் பின்புலத்தில் தங்களுக்குள் யார் உத்தமர்கள் என்னும் அடிப்படையில் முட்டிக் கொள்வதில் எவ்வித பொருளுமில்லை. ஏனெனில் எவருக்குமே தமிழ் மக்களின் வாக்குகளைக் கோரும் தகுதி இல்லை.