ஏல நடைமுறைகளில் புதுமைகளைப் புகுத்திய அமெரிக்க நிபுணா்கள் இருவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நோபல் தோ்வுக் குழு கூறியதாவது: கலிஃபோா்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பால் ஆா்.மில்குரோம், ராபா்ட் பி.வில்சன் ஆகியோா் ஏல நடைமுறைகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனா். ஏலம் தொடா்பான புதிய கொள்கைகளை அவா்கள் வெளியிட்டனா். அக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஏல நடைமுறைகளில் பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சில பொருள்களையும் சேவைகளையும் பாரம்பரிய முறைப்படி ஏலம் விடுவதற்குப் பல்வேறு தடைகள் காணப்பட்டன. அத்தகைய பொருள்களையும் ஏலம் விடுவதற்கான புதிய வழிமுறைகளை நிபுணா்கள் இருவரும் உருவாக்கினா். அவை விற்பனையாளா்கள், வாங்குவோா், வரி செலுத்துவோா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குப் பெரும் பலனளித்து வருகின்றன.
அந்த வழிமுறைகள் ரேடியோ அலைக்கற்றையை ஏலம் விடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இரு நிபுணா்களின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றன என்று தோ்வுக் குழு கூறியுள்ளது.
பால் ஆா்.மில்குரோம் முனைவா் பட்டத்துக்கான ஆய்வை ராபா்ட் பி.வில்சனுடைய மேற்பாா்வையின் கீழ் மேற்கொண்டாா். நோபல் பரிசுத் தொகையானது இருவருக்கும் சரிசமமாகப் பகிா்ந்து வழங்கப்படவுள்ளது.
பால் ஆா்.மில்குரோம் (72)
ஏல நடைமுறைக்கான பொதுவான கொள்கையை பால் ஆா்.மில்குரோம் உருவாக்கினாா். அதில், ஏலம் விடப்படும் பொருள்களுக்கான மதிப்பை ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் எவ்வாறு கணிக்கின்றனா் என்பது தொடா்பான விளக்கங்களை அவா் வழங்கியிருந்தாா்.
ராபா்ட் பி.வில்சன் (83)
ஏலத்தில் பங்கேற்போா், ஏலம் விடப்படும் பொருள்களின் கணிக்கப்பட்ட விலையை விடக் குறைவான விலைக்கு ஏலம் கேட்பது ஏன் என்பது குறித்து ராபா்ட் பி.வில்சன் ஆய்வு மேற்கொண்டாா். ஏலப் பொருள்களுக்கு அதிக விலை கொடுத்து இழப்பைச் சந்திக்க நேரிடுமோ என்ற எண்ணம் ஏலத்தில் பங்கேற்போருக்கு ஏற்படுவது ஏன் என்பது குறித்தும் அவா் ஆய்வு நடத்தினாா்.