அரசியல் பதவிகளை வகிப்போரின் அநாவசிய சலுகைகளும் வசதிகளும்!

0
61

மக்களால் தெரிவு செய்யப்படும் பதவிகளை வகிப்பவர்கள் மக்களின் வரிப் பணத்தில் வசதிகளை அனுபவிக்கக்கூடாது என்ற நம்பிக்கையை கொண்டவர் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க. முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்க செலவில் அனுபவிக்கும் வாசஸ்தலம், வாகனங்கள், பாதுகாப்பு உட்பட சிறப்பு வசதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுபவிக்கும் தீர்வையற்ற வாகன இறக்குமதி சலுகை உட்பட பல்வேறு சலுகைகளையும் இல்லாமல் செய்யப்போவதாக திஸநாயக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களிலும் கூறினார். தற்போது பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களிலும் அவர் அதை கூறுகிறார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க என்று இலங்கையில் இன்று ஐந்து முன்னாள் ஜனாதிபதிகள் இருக்கிறார்கள்.

இவர்களில் எவருமே தங்கள் சொந்தத்தில் வசதி வாய்ப்புகளுடன் வாழமுடியாதவர்கள் அல்லர். என்றாலும் அரசாங்கத்திடமிருந்து மேலும் வசதி வாய்ப்புகளைக் கூடுதலாக எதிர்பார்க்கிறார்களே தவிர, தற்போது அனுபவிப்பவற்றில் எந்த ஒன்றையும் கைவிடுவதற்குத் தயாராக இல்லை. இவர்களுக்கான இந்த வசதிகள் சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டவையாகும். முன்னாள் ஜனாதிபதிகள் இறந்தால் அவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கும் அதே வசதி வாய்ப்புகள் அரசாங்க செலவில் கிடைக்கின்றன. இன்று அவ்வாறாக மறைந்த ஜனாதிபதியின் வாழ்க்கைத் துணை என்று காலஞ்சென்ற ரணசிங்க பிரேமதாஸவின் மனைவி ஹேமா பிரேமதாஸவே அரசாங்க செலவில் வசதிகளை அனுபவிக்கிறார். அரசியலில் ஊழல் முறைகேடுகள் பெருகுவதற்கான பிரதான காரணங் களில் ஒன்று மக்கள் பிரதிநிதிகள் என்று கூறப்படுபவர்களால் அனுபவிக்கக் கூடியதாக இருக்கும் சிறப்பு சலுகைகளும் வசதிகளுமாகும்.

அத்துடன், குறுகிய காலத்துக்குள் சொத்துகளை குவிப்பதற்கான ஒரு சுலபமான மார்க்கமாகவும் அரசியல் விளங்குகிறது. முன்னைய காலத்தைப் போலன்றி தற்போது தேர்தல்களில் போட்டியிடுவதற்கு முண்டியடிக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளில் குறைந்தபட்சம் ஒரு பத்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் முன்னைய வாழ்க்கை முறையையும் தற்போதைய வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு நோக்கினால் அவர்கள் அரசியலை எதற்கு பயன்படுத்தினார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். ஓர் அரசாங்க ஊழியர் ஒரு கண்ணியமான ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு குறைந்தது 25 வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து விட்டால் போதும் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களைத் தங்களுக்கு சேவை செய்வதற்காகவே மக்கள் தேர்தல்களில் தெரிவுசெய்கிறார்கள்.

அதே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபையின் கூட்டங்களில் பங்கேற்பதற்கு தினமும் விசேட கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. தங்களது கடமைகளைச் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போக்குவரத்து உட்பட பல்வேறு தேவைகளுக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், அதற்காக சிறப்பு சலுகைகள், வசதிகள் என்று அவர்கள் அனுபவிக்கின்ற சொகுசுகளை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. நாட்டின் வங்குரோத்து நிலைக்கு பொறுப்பானவர்கள் என்று உயர் நீதிமன்றத்தால் கூறப்பட்ட மூன்று ராஜபக்ஷ சகோதரர்களில் இருவர் முன்னாள் ஜனாதிபதிகள். திருமதி குமாரதுங்கவும் மைத்திரிபால சிறிசேனவும்கூட வௌ;வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களே. நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்களையும் நீதின்றங்களால் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களையும் அவர்களின் தவறான ஆட்சிக்கு பின்னரும்கூட அரசாங்க செலவில் பராமரிப்பதைப்போன்ற கேலிக்கூத்து வேறு எதுவும் இருக்கிறதா? அரசியல் பதவிகளை வகிப்பவர்கள் அனுபவிக்கும் அநாவசியமான சிறப்பு சலுகைகளையும் வசதி வாய்ப்புகளையும் பெருமளவு குறைப்பதற்கான சட்டமூலம் அடுத்த பாராளுமன்றத்தில் அவசரமாகக் கொண்டுவரப்பட வேண்டும். ஊழல் அரசியல் கலாசாரத்தை ஒழிப்பதை நோக்கிய முதற்படியாக அது நிச்சயமாக அமையும்.