அரசியல் முதிர்ச்சி அவசியம்

0
84

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்னும் பெயரில் இயங்கி வரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முஸ்லிம் மக்களும் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றது.

முஸ்லிம் மக்களின் அரசியல் அணுகுமுறைகளை விளங்கிக் கொண்டிருக்கும் எவருமே இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள். இதேபோன்று மலையக மக்களை நோக்கியும் இவ்வாறான கோரிக்கை ஒன்றை முன்வைக்க முடியாது.

ஏனெனில், இவ்வாறான கோரிக்கை ஒன்றை தமிழ் மக்கள் மத்தியில் முன்வைப்பதும் அடிப்படையிலேயே தவறானது. கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களின்போதும் காங்கிரஸ் பகிஷ்கரிப்பு கோரிக்கையையே முன்வைத்திருந்தது. ஆனால், அதனை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டனர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் அணியினர் இந்த முயற்சியை எதிர்த்து செயல்பட்டு வருகின்றனர். அதேபோன்று, எம். ஏ. சுமந்திரனும் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து செயல்பட்டு வருகின்றார்.

தமிழ் அரசுக் கட்சியில் சிறீதரன் தலைமையிலான அணியினர் பொது வேட்பாளரின் முக்கியத்துவத்தை புரிந்து செயல்பட்டுவரும் நிலையில் சம்பந்தன், சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் தமிழ் பொது வேட்பளார் நிலைப்பாட்டை எதிர்த்து செயல்பட்டு வருகின்றனர். ஆனால், இவ்வாறு எதிர்த்து செயல்பட்டு வருபவர்கள் மறுபுறம் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகக்கூறும் துணிவற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

வேட்புமனு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் முடிவை அறிவிப்பதாக கூறுவதானது. ஒருவகையில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகவே அமையும். கடந்த காலத்திலும் இவ்வாறான தவறுகளே நடைபெற்றிருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் தமிழ் பொது வேட்பாளர் நிலைப் பாட்டை எதிர்த்து தோற்கடிப்பதில் சுமந்திரன் அணி மற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தரப்பு ஆகிய இருவருமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகவே தொழிற்பட்டு வருகின்றனர்.

ஏன் இந்தளவுக்கு இதனை எதிர்க்க வேண்டும்? இதனால் இவர்கள் சாதிக்கப் போவது என்ன? தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போகும் உச்சபட்சமான நன்மை என்ன? இந்தக் கேள்விகளை முன்வைத்து பொதுவெளியில் உரையாட எவருமே தயாராக இல்லை.

பகிஷ்கரிப்பை முன்வைக்கும் காங்கிரஸ் அணியோ ஒற்றையாட்சிக்குள் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறுகின்றது. ஆனால், ஆறாவது திருத்தச் சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றது. உண்மையில், ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பை ஓர் எதிர்ப்பு வடிவமாகக் கொள்வதாயின் அதனை அரைகுறையாக மேற்கொள்ளக் கூடாது.

முழுமையாக பிரயோகிக்க வேண்டும். ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் இருக்கும் எந்தவொரு விடயத்திலும் பங்குகொள்ளாது – எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க வேண்டும். அது ஒரு மக்கள் போராட்டமாக அல்லது இரகசிய ஆயுத அமைப்பு வடிவமாக மட்டுமே இருக்க முடியும்.

ஆனால், ஒற்றையாட்சிக்கு உட்பட்டு அனைத்திலும் பங்கு கொண்டு விட்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பளாரை எதிர்ப்பதானது அடிப்படையிலேயே ஓர் அரசியல் முதிர்ச்சியற்ற அணுகு முறையாகும்.

இதுவும் தமிழ் மக்களை முட்டாளாக்கும் முயற்சிதான். மறுபுறம் – ஏற்கனவே ஆணை பெற்றுவிட்டோம் – மீண்டுமோர் ஆணை எதற்கு என்னும் அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளரை எதிர்த்து களமிறங்கியிருக்கிறது சுமந்திரன் அணி.

இங்கு, ஆணை பெறுவது பற்றி எவருமே பேசவில்லை. தவிர, அப்படியே பெற முயற்சித்தாலும் அது தவறான ஒன்றல்ல. ஏனெனில், 1976ஆம் ஆண்டுக்கு பின்னரான தலை முறை எதற்காக முன்னைய ஆணைக்குக் கட்டுப்பட வேண்டும்? சுமந்திரன் போன்றவர்களிடம் பதிலிருக்கின்றதா? அரசியலை முதிர்ச்சியு டன் அணுக முன்வர வேண்டும்.