சுபமான ஆரம்பத்துக்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பெரும் ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘அறுவடைத் திருநாள்’ என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.
புதிய திசையை நோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக- வெளிப்புற சகவாழ்வு என்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.
இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய ஒரு திசையின் தொடக்கமாக ‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
நாட்டில் உருவாகியுள்ள புதிய உத்வேகத்துடன், இலங்கையர்களாகிய நம் அனைவருக்கும், ‘அழகான வாழ்க்கை’ என்ற நம்பிக்கையை நம்
இதயங்களில் சுமந்து, புத்தாண்டில் புதிய உற்சாகத்துடன் முன்னோக்கிக் கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதற்காக சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கு உகந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கலாசார நெறிமுறை இருப்பை உருவாக்குவதன் மூலம் நிலையான அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைமை பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலை நாங்கள் ஏற்கிறோம்.
அளித்த வாக்குறுதிகளை தடைகளுக்கு மத்தியிலும் பின்வாங்காத துணிச்சலுடனும் அசைக்க முடியாத உறுதியுடனும் நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.
இந்த நாட்டு மக்களின் முகங்களில் நீடித்த புன்னகையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இந்த செயற்பாட்டில், புதிய அணுகுமுறை
களுடன், ஒற்றுமையுடனும் பங்கேற்புடனும் ஒன்றிணைய உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.