கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட திவுலப்பிட்டியவைச் சேர்ந்த பெண், தற்போது அச்சுறுத்தலாக உருவாகியுள்ள மினுவாங்கொட கொரோனா தொற்றின் ஆரம்பப்புள்ளி அல்ல. வேறு யாரோ மூலமாகத்தான் அந்த தொற்று உருவாகியிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் தலைமை தொற்றுநோயியல் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர.
அவர் மேலும் தெரிவிகையில்:-
தொழிற்சாலை தொழிலாளர்களின் விவரங்களை ஆராய்ந்தபோது, செப்ரெம்பர் 20 ஆம் திகதி முதல் சில தொழிலாளர்களுக்கு சுவாச நோய்கள் இருந்தமை தெரிய வந்துள்ளது. முதலில் தொற்று அடையாளம் காணப்பட்ட பெண் செப்ரெம்பர் 28 அன்று அறிகுறிகளை உணர்ந்தார்.
குறிப்பிட்ட பெண் 28ஆம் திகதி சுகயீன அறிகுறிகளை உணர்ந்ததையடுத்து 30ஆம் திகதி கம்பஹா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் சென்றார்.
மினுவாங்கொடை கொரோனா தொற்று அலை எவ்வாறு உருவானது, அந்தப் பெண் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பதை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
அது எப்படி நடந்தது என்பதை நாங்கள் கண்டுபிடிக்கலாம் அல்லது கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்.
பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் கணக்காய்வு மேற்கொள்ள அல்லது வேறு சில பணிகளுக்காக வெளிநாட்டினர் வந்தனர் எனக் கூறப்படும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை-என்றார்.