இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் தோல்வியைத் தழுவியமை குறித்த ஆதங்கம் சமரச நடவடிக்கைளில் ஈடுபட்ட நோர்வே நாட்டிடம் இன்றுங்கூட இருந்து வருவதையே மிக அண்மையில் லண்டன் ஊடகமொன்றுக்கு விசேட சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய பேட்டியிலிருந்து அறிய முடிகின்றது.
நோர்வேயின் சமாதான முயற்சிகள் இலங்கைத் தமிழர்களின் அரசியல்; அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குக் கிடைத்த ஒரு பொன்னான சந்தர்ப்பமென்றால் அது மிகையாகாது.
இந்தியா தனது அமைதி முயற்சிகளில் இலங்கையில் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்திருந்தது. இதுதவிர, அரசியலில் தனது நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதியிருந்த ராஜீவ் காந்தியை அயல் நாட்டின் ஒரு தீவிரவாத அமைப்பு படுகொலை செய்ததைக்கூட சகிக்க முடியாததாகவும் ஒரு கௌரவ பிரச்னையாகவும் இலங்கை விவகாரத்தை கருதியிருந்ததை கவனத்தில் எடுத்தே நோர்வே இலங்கையில் தனது சமாதான முயற்சிகளில்; ஈடுபட ஆரம்பித்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் ராஜீவ் காந்திக்கு எழுதப்பட்ட ஒரு மரண சாசனமாகவே அமைந்திருந்தது. ஏனெனில், ராஜீவ் காந்தி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வந்தபோது முதலில் கொழும்பில் அணிவகுத்து நின்ற கடற்படைச் சிப்பாய் ஒருவரினால் அவரது கையிலிருந்த துப்பாக்கியின் அடிப்பக்கத்தினால் தாக்கப்பட்டார்.
இத்தாக்;குதல் இந்தியாவுக்கு இலங்கை விடயத்தில் ஏற்பட்ட முகலாவது அபசகுனமாகவே காணப்பட்டது.
இதன்பின்னர் இந்தியாவுக்கு அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக ஏற்பட்ட பலத்த பின்னடைவுகள் இறுதியாக ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுமளவுக்கு முறுக்கேறியிருந்ததையே அவதானிக்க முடிந்தது.
இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகள் வேண்டுமானால் நிறைவேற்றப்படலாம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வகையிலும் விட்டு வைக்கப்படக்கூடாதவர்கள் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்த தருணத்திலேயே நோர்வே இலங்கையில் தனது சமரச முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் விருப்பின் பேரிலேயே நோர்வே சமரச முயற்சிகளில் இலங்கை அரசின் ஒப்புதலோடு இறங்கியிருந்தது. நாளடைவில் தனது முயற்சிகளில் இந்தியாவின் குறுக்கீடுகள் இருக்கக் கூடாதெனக் கருதியே தனது பலத்தை மேலும் இராஜதந்திர ரீதியாக நோர்வே அதிகரித்திருந்தது.
இதற்கென அனுசரணை நாடுகள் என்ற வகையில் நோர்வே தன்னுடனும் இந்தியா மற்றும் இலங்கையுடன் இராஜதந்திர உறவுகளை நல்ல முறையில் பேணுகின்ற அமெரிக்கா, ஜப்பான் உட்பட சில நாடுகளை சமாதான முயற்சிகளில் இணைத்துக் கொண்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக சுதாகரித்துக் கொண்டு எழும்புவதற்கும், இந்தியாவின் அழுத்தங்களில் இருந்து தப்புவதற்கும் நோர்வேயின் சமரச முயற்சி ஒரு நல்ல வரப்பிரசாதமாகவே அமைந்திருந்தது.
ஆனால், நல்ல சந்தர்ப்பங்களைக் கோட்டைவிடும் புலிகளின் போக்கு நோர்வேயின் சமரச முயற்சிகளைப் பொறுத்தவரையும் தொடர்ந்திருந்ததையே அவதானிக்க முடிந்தது. விசேட சமாதான தூதராக தகுந்த முடிவுகளை எடுக்கும் சகல உரிமைகளையும் எரிக் சொல்ஹெய்முக்கு நோர்வே அரசாங்கம் வழங்கியிருந்தது.
இதனடிப்படையில் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க ஸ்கன்டிநேவிய நாடுகளைச் சேர்ந்த யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களும் நோர்வேயின் ஏற்பாட்டில் இலங்கையின் தரை,கடல்,ஆகாய மார்க்கங்களில் முழுமையான யுத்த நிறுத்தம் அமுலிலிருப்பதை உறுதி செய்ய பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
இதுதவிர சமாதான செயலகமொன்றும் கிளிநொச்சியில் நோர்வேயினால் அழகுற அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலருக்கு வெளிநாடுகளில் சமாதானம் குறித்த செயலமர்வுகளையும் நோர்வே ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், இந்திய அமைதிப் படைக்கு ஏற்பட்ட விழுப்புண்களாலும், ராஜீவ் காந்தியின் மரணத்தனால் ஏற்பட்ட ஆழமான மனக்குமைச்சலுடன் இந்தியா இருந்ததை பல சுற்றுச் சமாதானப் பேச்சுக்கள் முடிவடைந்த பின்னரே நோர்வே அறிந்து கொண்டதுடன், நாளடைவில் தமது கடமைகளை முடித்து நேரடியாகவே கொழும்பிலிருந்து நோர்வே திரும்புவதைவிட புதுடில்லி சென்று ஒஸ்லோ செல்வதையே எரிக் சொல்ஹெய்ம் வழக்கப்படுத்திக் கொண்டார்.
இந்தியாவின் இலங்கை தொடர்பான அனுபவங்களையும் அவர் புதுடில்லியில் கேட்டறிந்தவராக தனது சமரச நடவடிக்கைளில் தொடர்ந்து ஈடுபடலானார். இலங்கையில் சமரச நடவடிக்கைகளில் ஈடுபட்ட காலகட்டங்களிலேயே நோர்வே வேறு அரசியல் சர்ச்சைகளுக்குள்ளான நாடுகளிலும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகரமான முன்னேற்றங்களை எட்டியிருந்தது.
ஆயினும் இலங்கையில் தனது சமாதான முயற்சிகள் மண் கௌவுமென்பதையும் மகாபாரத இதிகாச காலங்களிலிருந்தே இராஜதந்திர நகர்வுகளில் திறமையாக தனது காய் நகர்த்தல்களை மேற்கொள்ளும் இந்தியாவை மீறி தெற்காசியாவில் தன்னால் வாலாட்ட முடியாதென்பதையும் தனது இலங்கை அனுபவம் மூலமாகவே எரிக் சொல்ஹெய்ம் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டார்.
இது இவ்வாறிருக்க புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான சமரசப் பேச்சுக்கள் தாய்லாந்தில் நோர்வே அனுசரணையோடு 2002 ஆம் ஆண்டு ஆரம்பமானபோது இரு தரப்பினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் புலிகளது பேச்சுக் குழுத் தலைவர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தினாலும் அரசு சார்பில் பேராசிரியர் ஜி.எல் பீரிஸினாலும் சமாதான விருட்சமொன்று பேச்சு இடம்பெற்ற இடத்தில் எரிக்சொல்ஹெய்ம் முன்னிலையில் நாட்டப்பட்டிருந்தது.
எரிக் சொல்ஹெய்ம் ஆரம்பித்த சமரச முயற்சிகள் தோல்வியில் முடிந்ததே வரலாறு.
ஆனால், சமரச முயற்சிகளின் ஆரம்பத்தில் எரிக்சொல்ஹெய்ம் முன்னிலையில் நாட்டப்பட்ட விருட்சம் தற்போது பரந்து விரிந்து வியாபித்திருப்பதையே அறிய முடிகிறது.