அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது முன்னாள் இராணுவத் தளபதியும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்திருக்கும் கருத்து தமிழர் ராஜதந்திரத்தின் பரிதாப நிலைமையை தெளிவாக எடுத்துரைக்கின்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் கடைசி மகனான பாலச்சந்திரனும் ஒரு பயங்கரவாதிதான் என்றும் குறிப்பிட்டிருக்கும் பொன்சேகா, பாலச்சந்திரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிறுவர் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட வேண்டிய ஒருவர் என்பதே பொன்சேகாவின் வாதம். இங்கு விடயம் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பானதல்ல. விடயம் தமிழ் தலைவர்களின் அரசியல் ஆளுமை தொடர்பானது.
இன்று நாடாளுமன்ற விவாதங்களை அவதானித்தால் ஒரு விடயத்தை தெளிவாக காணலாம். அதவாது, தமிழர்கள் கடந்த காலத்தில் எவரையெல்லாம் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்களோ, எவரையெல்லாம் நம்பி வாக்களித்தார்களோ அவர்கள்தான் தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான பிரச்சாரங்களை செய்கின்றனர். 2010இல் சரத்பொன்சோவிற்கு வாக்களிக்குமாறு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தமிழ் மக்களை கோரியது. இத்தனைக்கும் முள்ளிவாய்க்கால் அகோரம் இடம்பெற்று ஒரு வருடம் கூட முடிந்திருக்கவில்லை. அவ்வாறானதொரு சூழலில் அந்த யுத்தத்தை வழிநடத்திய இராணுவத் தளபதிக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு சம்பந்தன் கோரினார். இன்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களும் அப்போது சம்பந்தனுடன்தான் இருந்தனர்.
இன்று அதே பொன்சேகாதான் தமிழர்களுக்கு எதிராக மோசமான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார். இதே போன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், அதனை புறம்தள்ளி சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு சம்பந்தன் – சுமந்திரன் தரப்பின் கூட்டமைப்பு கோரியது. ஆனால் இன்று அதே சஜித் பிரேமதாசவின் அணியினர்தான் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் வாதங்களை எதிர்ப்பதில் முழுமூச்சுடன் செயற்படுகின்றனர். ராஜபக்சக்கள் பக்கத்தை அனைவரும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கள – பௌத்த இனவாதமோ எதிரணியினர் பக்கத்திலிருந்தே ஆவேசத்துடன் வெளிவருகின்றது.
நாங்கள் ராஐபக்சக்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்லர் என்பதை காட்டுவதே பொன்சேகாவினதும், சஜித் தரப்பினதும் அரசியல் அணுகுமுறையாக இருக்கின்றது. இவர்களுக்கு ஒரு வேளை தமிழர்கள் வாக்களிக்காதிருந்தால் இது தொடர்பில் பேச வேண்டியதில்லை. ஆனால் தமிழர்கள் நம்பி வாக்களித்தவர்களே இவ்வாறு நடந்து கொள்ளும் போது, அது தமிழர் தலைமைகளின் அரசியல் ஆளுமைக் குறைபாட்டையே தெளிவாக எடுத்தியம்புகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூரநோக்கற்று அரசியல் முடிவுகளை எடுத்திருக்கின்றது என்பதையே இந்த விடயங்கள் தெளிவாக உணர்த்துகின்றது. இத்தனைக்கும் சம்பந்தன் அவ்வப்போது தாம் ராஜதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறிக்கொள்ளும் ஒருவர். சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்களை இப்போதும் சிலர் படித்தவர்கள், விடயமுள்ளவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பதை காணமுடிகின்றது. இதுதானா அவர்களின் படிப்பு – இதுதானா சம்பந்தனின் ராஜதந்திர ஆற்றல்? பொல்லை நாங்களே கொடுத்துவிட்டு ஒருவரிடம் அடிவாங்குவதா தமிழர் ராஜதந்திரம்?
-ஆசிரியர்