ஞானசார தேரர் ஒரு காலத்தில் சர்ச்சைக்குரிய ஒருவர். அவரின் தலைமையில் இயங்கிய பொதுபல சேனா இலங்கைத் தீவின் அரசியலில் திடீர் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வல்லமையுடன் இருந்தது. ‘நல்லாட்சி’ காலத்தில் நீதிமன்ற அவதூறு வழக்கு ஒன்றில் கைதான அவர் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறையில டைக்கப்பட்டார். தற்போது, விடுதலையாகியிருக்கும் அவர் உடனடியாகவே பேச முற்பட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக முன்னர் எந்த விடயம் சர்ச்சைக்குரிய இன விவகாரமாக இருந்ததோ – அதனையே கையிலெடுத்திருக்கிறார்.
அவர் திடீரென்று இவ்வாறு பேசுவதை தற்செயல் நிகழ்வு என்று கூறலாமா? ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தாம் பல்வேறு தகவல்களை சுயாதீனமாக சேகரித்தார் என்றும் தாக்குதல் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை எச்சரித்தார் எனவும் ஆனால், அவர் அதனை பொருட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். புதிய அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்தால் அதற்கு உதவத் தயாராக இருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதல் முஸ்லிம்கள் தொடர்பான இன விரோத அலையை எவ்வேளையிலும் பற்றவைக்கும் ஆற்றலோடுதான் இப்போதும் காணப்படுகிறது. இந்த நிலையில் ஞானசார தேரர் அந்த விவகாரத்தைத் திடீரென்று கையிலெடுத்திருப்பது ஓர் அபாய எச்சரிக்கையை முன்னுணர்த்துகிறதா என்னும் கேள்வியை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. அதேவேளை, தேரர் இப்போது இன்னொரு புதிய விடயத்தையும் கையிலெடுத்திருக்கிறார். அதாவது, அமெரிக்க உதவி நிறுவனம் திட்டமிட்டு பல அரசுசாரா நிறுவனங்களுக்கு நிதி வழங்கியதாகவும் அவ்வாறான திட்டங்கள் பௌத்த மக்களை பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டவையாக இருந்தன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகிறார். அண்மையில், அமெரிக்க உதவி நிறுவனத்தின் வேலைத்திட்டங்களை அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் 90 நாட்களுக்கு இடைநிறுத்தியிருக்கிறது. இதனால், உலகெங்கும் ஆயிரக்கணக்கான அரசுசாரா நிறுவனங்களும் அராசாங்கத் திட்டங்களும் முடங்கியிருக்கின்றன. உண்மையில், இது ஓர் உலகளாவிய விவகாரமாகும். அதாவது, அமெரிக்க உதவி நிறுவனத்தின் கீழ் நிதியளிக்கப்பட்ட பல திட்டங்கள் வினைத்திறன் மிக்கவையாக இருக்கவில்லை. எனவே, அமெரிக்க மக்களின் பணத்தை இவ்வாறு வீணாக்க முடியாது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ட்ரம்பின் நிர்வாகம் இந்த விடயத்தைக் கையிலெடுத்திருக்கிறது.
இலங்கையில் பல மில்லியன் டொலர்கள் ஊடக மேம்பாடு என்னும் பெயரில் செலவழிக்கப்பட்டதாக ட்ரம்ப் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட வினைத்திறன் மேம்பாடு தொடர்பான திணைக்களம் கேள்வி எழுப்பியிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே, அண்மையில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் சிலர் அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் ஒன்றுகூடி, ‘அமெரிக்க உதவி நிறுவனத்தால் செலவழிக்கப்பட்ட நிதி தொடர்பில் விசாரணைகள் வேண்டும்’, என்று கோரிக்கை முன் வைத்திருந்தனர். தற்போது அதே குற்றச்சாட்டையே ஞானசார தேரரும் முன்வைக்கிறார்.
விடயங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அமெரிக்கா தொடர்பில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது புதிய விடயமல்ல. இலங்கையில் இதற்கு முன்னரும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்வைக் கப்பட்டிருக்கின்றன. ஆனால், தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் சூழலில் ராஜபக்ஷக்களின் சகாக்கள் முன்னைய சுலோகங்களோடு மீண்டும் முகம் காட்டுவதை தற்செயலென்று ஒதுக்கிவிட முடியுமா என்பதுதான் கேள்வியாகும்.