இந்திய-இலங்கை ஒப்பந்தமும் அதில், ராஜீவ் காந்தியும் ஜே. ஆர். ஜெயவர்த்தனவுமான பல கருத்துக்களைச் சில தினங்களுக்கு முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சி. வீ. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.‘நியூ இந்தியா போரம்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில், ‘இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற காணொளி உரையாடலில் விக்னேஸ்வரன் பங்குபற்றியிருந்தார். யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதராகவிருந்த, ஓய்வுபெற்ற இந்திய ராஜதந்தரி ஏ. நடராஜனும் பங்குற்றிய இக் கலந்துரையாடல், தமிழக மாநில பா. ஜ. க. துணைத் தலைவி திருமதி வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடனான இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தம், இலங்கை அரசியலில் இப்பொழுது ஒரு முக்கிய பேசுபொருளாகும் நிலையிலும், இலங்கையில் தமிழர்களின் அரசியல் தீர்வோடு அது பெரிதும் பின்னிப் பிணைந்துள்ள நிலையிலும், இக் காணொளி உரையாடலில் விக்னேஸ்வரன் யாருக்காக, யார் நலன் கருதி, எத்தகைய பொறுப்போடு பேசினார் என்பது பெரும் விமர்சனத்துக்குரியது. எனினும், தன்னுடைய முதலமைச்சர் பதவிக் காலத்தில் தன்னுடைய ‘விளைச்சலின் அறுவடைக்கு’ காரணம் கற்பிக்க அவர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.எப்படியெனினும், ‘ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன, ராஜீவ் காந்தியை தனது சாணக்கியத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக திருப்புவதில் வெற்றி கண்டார்’ என்று, இந்த ஒப்பந்தம் தொடர்பில் விக்னேஸ்வரன் கூறுவது முற்றிலும் தவறானது. மாறாக, இந்த விவகாரத்தில் இந்தியாவினால் ஜே. ஆர். ஜெயவர்த்தன வெகுவாக ஓரங்கட்டப்பட்டார்; நிர்ப்பந்தத்துக்குள்ளானார்.இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் 30ஆவது ஆண்டு நிறைவில், இது தொடர்பில் எழுதிய கட்டுரைக் குறிப்பொன்றை இவ் வேளையில் நினைவுகொள்ளலாம்.1987 ஜூலை 29இல், ஒரு சமாதான அரசியல் தீர்வுக்கான ‘இந்திய-இலங்கை ஒப்பந்தம்’ கொழும்பில் கைச்சாத்தானது. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவும் கையொப்பமிட்டார்கள்.இலங்கையில் ஜெயவர்த்தன ஜனாதிபதியாகவும் இந்தியாவில் மொரார்ஜி தேசாய் பிரதமராகவுமிருந்தவேளையில் ஒருமுறை இந்திய குடியரசு தினத்தின்போது, இலங்கையிலிருந்து ஒரு பாராளுமன்ற தூதுக்குழு காமினி திசாநாயக்க தலைமையில் புதுடில்லி சென்றிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மானிப்பாய் எம். பி., வி. தர்மலிங்கமும் அதில் இடம்பெற்றிருந்தார். இந்திரா காந்தி எதிர்க்கட்சித் தலைவி.ராஷ்டிரபதி பவனில் இரவு போசன விருந்து நடைபெற்றது. இடதுசாரி அரசியல் கொள்கையுடையவரான தர்மலிங்கம், பிராந்திய அரசியலில் இந்தியாவுக்கும் இந்திராவுக்கும் வலுவான ஆதரவானவர். விருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கையில் காமினி திசாநாயக்கவை ‘உச்சிவிட்டு’, இந்திரா காந்தியின் பக்கம் சென்று, அவருடன் தனியாக பேச்சுக்கொடுத்தார் தர்மலிங்கம். அப்போது, மொரார்ஜி தேசாயையும் ஜே. ஆரையும் குறிப்பிட்டு இந்திரா காந்தி சொன்னாராம், ‘two old fools’ (வயதுபோன இரு முட்டாள்கள்) என்று.இது, ‘தர்மர்’ பின்னர் என்னிடம் கூறியது. Between the lines என்பார்களே, அப்படி நோக்கவேண்டியது இது. ஆனால், தெற்காசியாவின் ‘கிழ நரி’ என்பதுதான் ஜே. ஆருக்கான அரசியல் வருணனை.இந்த கிழ நரி, இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான அந்த ஜூலை மாதம் முழுவதும் ‘கூண்டில் அடைபட்ட சிங்கமாகவே’ இருந்தது. ‘உன்னுடைய வயதுகூட என்னுடைய அரசியல் அநுபவத்துக்கு ஈடாகாது’ என்று நகைத்த ஜே. ஆரை, இந்தியா நடைமுறைப்படுத்தத் தீர்மானித்த ஒப்பந்த வரைவிலிருந்து இம்மியும் விலகவியலாத நிலையிலேயே ராஜீவ் காந்தி வைத்திருந்தார்.இந்திய தூதர் டிக்ஷித்தைத் தன்னுடைய ‘வாட் பிளேஸ்’ இல்லத்துக்கு அழைத்த ஜே. ஆர்., தன்னுடைய மனைவி அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்க விரும்புவதாக தெரிவித்தார்.1. ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ராஜீவ் காந்தி கொழும்பு வருவாரா?2. ஆட்சியைக் கவிழ்த்துவிடக்கூடிய எதிர்ப்பும் அபாயமும் இருப்பதால், ஜனாதிபதியின் பாதுகாப்பையும், அவரின் தொடர்ந்த ஆட்சியையும் ராஜீவ் காந்தி உறுதிப்படுத்துவாரா?இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும், பிரதேச ஒருங்கிணைப்புக்கும் குந்தகமற்றவிதத்தில், தமிழர்களின் அதிகபட்ச அபிலாஷைகளை நிறைவுசெய்யும் திருப்திகரமான உடன்பாடொன்றில் இந்தியாவின் உறுதியை டிக்ஷித் அப்போது தெரிவித்தார்.இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் டிக்ஷிற் கலந்துகொண்டு விளக்கமளிக்க ஜே. ஆர். கோரினார். பிரதமர் பிரேமதாச அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.காமினி திசாநாயக்க, றொனி டி மெல் மற்றும் சில தமிழ் அமைச்சர்களைத் தவிர, முழு அமைச்சரவையும் ஒப்பந்தத்தை எதிர்த்தது. அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, ஜே. ஆர். டிக்ஷிற்றிடம் தனிமையில் கூறுகிறார்; ‘இந்திய பிரதமரின் உடன்படிக்கைக்கு சம்மதிக்கும் மிகப்பெரும் அபாயகரமான சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.’ஜே. ஆர். ஜெயவர்த்தன, ‘வயதுபோன முட்டாளா’ அல்லது ‘கிழ நரியா’?