இந்திய, லடாக் எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கான சரக்குகளுடன் லே சென்றடைந்தது இந்திய விமானப்படையின் சி-17 குளோப் மாஸ்டர் விமானம்.
லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்து மீறி ஊடுருவ முயற்சித்து வருவதால், கடந்த 6 மாதங்களாக போர் பதற்றம் நீடிக்கிறது. போர் மூண்டால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இதனால் ஏராளமான ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். போர் தளவாடங்கள், எரிபொருள், வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் விமானப்படைக்கு சொந்தமான சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் லடாக்கின் மலைப்பாங்கான லே பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் நேற்று தரையிறங்கியது. வீரர்களுக்கு தேவையான பொருட்களுடன் இந்த விமானம் அங்கு சென்றுள்ளது.
சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் கடந்த 2013-ல் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. பெரிய ரக ஆயுதங்கள், வீரர்கள் மற்றும் இயற்கைப் பேரிடரின்போது நிவாரண பொருட்களை ஏற்றிச் செல்வதில் இந்த விமானம் முக்கிய பங்கு வகிக்கிறது.