கடந்த பல வாரங்களாக ஊர்க்குருவியால் பறக்க முடியவில்லை. பல்வேறு தரப்பினரும் அது குறித்து தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்தனர். தொடர்ந்து எழுத முடியவில்லை என்றாலும் இடையிடையே என்றாலும் எழுதலாமே என்று கேட்டவர்கள் பலர். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்குவது என்று பல்வேறு தரப்பினரும் முடிவெடுத்த ஆரம்பநாட்களிலிருந்து அதற்கு ஆதரவாக தொடர்ந்து எழுதி வந்தவர் இந்த ஊர்க்குருவியார்.
அதனால் தேர்தல் முடிந்த பின்னராவது அதுபற்றி எழுதவேண்டாமா என்று கனடா விலிருந்து நண்பர் ஒருவர் கேட்டி ருந்தார். நியாயமான கோரிக்கை தான் என்பதால் எழுதாமல் இருக்க முடியவில்லை. இந்த விடயம் தொடங்கிய நாட்களில் தமிழ் மக்கள் இந்த தேர்தலை தமிழ் மக்களின் கருத் துக்கணிப்பாக எதிர்கொள்ளவேண் டும் என்று சிலர் கருத்துச் சொன்ன போது, அப்படி அதனை கருத்துக் கணிப்பாக நடத்தினால், தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு தரவில்லை என்றால் எமது அடிப்படைக் கோரிக்கையே ஆட்டம் கண்டு விடும் என்று பலரும் எச்சரிக்கை செய்தனர்.
நியாயமான எச்சரிக்கை தான். அதனால் தான், இது கருத் துக்கணிப்பு அல்ல, தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத் தவும், இந்த நாட்டில் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும் இனப் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டி யதன் அவசியத்தை வலியுறுத்தியுமே தேர்தலை எதிர்கொள்வது என்று கூறப்பட்டது. இப்போது தேர்தல் முடிந்து விட்டது. எதிர்பார்க்கப்பட்ட வாக்குகள் அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், சிலர் எதிர்வுகூறியது போலல்லாமல் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாக்களித்திருக்கின்றனர். அதற்கு பல காரணங்களை கூறலாம். அது தமிழ் தேசியக் பொதுக்கட்டமைப்பு தமக்குள் சுயவிமர்சனங்களைச் செய்து, எதனால் அவ்வாறு எதிர்பார்க்கப்பட்டதுபோல வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை ஆராயவேண்டும்.
அதுவே எதிர்காலத்தில் அந்தக் கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு உதவும். தேர்தல் முடிந்ததும், வடக்குகிழக்கில் தமிழர்களின் வாக்குகள் பதினைந்து இலட்சம் என்றும் அதில் வெறும் இரண்டு இலட்சம் வாக்குகளையே தமிழ் பொதுவேட்பாளர் பெற்றுவிட்டார் என்று வேறு சில மேதாவிகள் கதை சொன்னார்கள். அப்படியெனில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகளே அண்ணளவாக நான்கு இலட்சம் மட்டும்தானே. அப்போ கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கட்சிகள் என்று சொல்லும் நமது கட்சிகளை நிராகரித்துவிட்டனர் என கொள்ளலாமா? இதுவல்ல இன்று நாம் சொல்ல வருவது, நடந்த முடிந்த தேர்தலில் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் எழுபத்தி ஐந்து வீதமானவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கே வாக்களித்தனர் என்றும், அதாவது தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கையையே அவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்றும் சிலர் பெருமைபேசி வருகின்றனர்.
சஜித் பிரேமதாஸவுக்குத்தான் தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களித்தனர் என்பது உண்மைதான். அதற்கு காரணம் தமிழ் அரசின் கோரிக்கைதான் என்பது மெட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதற்கு சமனானது. தமிழ் அரசு மேலும் இரண்டு கட்சிகளோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்தபோது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதற்கு கிடைத்த மொத்த வாக்குகள் ஒரு இலட்சத்தி பன்னிரண்டாயிரம் தான். ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் பொதுவேட்பாளர் பெற்றது அதைவிட அதிகமானது. அவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இலட்சத்து பதினாறாயிரம் வாக்குகளை பெற்றிருந்தார்.
தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரித்ததற்கு காரணம் தமிழ் அரசு கேட்டுக்கொண்டதனால்தான் என்பதை ஏற்றுக்கொள்வதெனில், தமிழ் அரசு எதற்காக அவரை ஆதரிக்க முடிவு எடுத்ததோ அதற் காகத்தானே தமிழ் தமிழ் மக்களும் அவரை ஆதரித்திருக்கவேண்டும். தேர்தலில் போட்டியிட்ட பிரதான மூன்று வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் விரிவாக ஆராய்ந்ததாகவும், அதில் சஜித் சற்று அதிகமாக தருவதாக தெரிவித்திருப்பதாலேயே அவரை ஆதரிக்க முடிவெடுத்ததாகவும், தமிழ் அரசின் பேச்சாளர் மதியா பரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்திருந்தார். அதாவது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் பதின்மூன்றாவது திருத்தத்தை அவர் முழுமையாக அமுல்படுத்துவதாக கூறியிருந்தார்.
மற்றையவர்கள் இருவரும் அதுபற்றி குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் சில உறுதியான முடிவை தெரிவிக்க வில்லை. ஆனால் சஜித் பதின் மூன்றை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று கூறியிருந்தார். அவரோடு கூட்டணியில் இருந்த மனோ கணேசனும் வடக்கு – கிழக்கில் சஜித்துக்கான தேர்தல் பிரசாரத்தில் சஜித்தை ஆதரியுங்கள், பதின்மூன்றை அவர் முழுமையாக அமுல்படுத்துவதை நான் உறுதி செய்வேன் என்று வேறு உறுதியளித்திருந்தார். ஆனால் தமிழ் பொதுவேட்பாளரோ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை பற்றியும் சமஷ்டி தீர்வு பற்றியும் வலியுறுத்தியிருந்தார். சஜித் பிமேதாஸவுக்கு பெருவாரியாக தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதால், தமிழ் மக்கள் இப்போது தமது பிரச்னைகளுக்கு தீர்வாக பதின்மூன்றை நிறைவேற்றினால் போதும் என்று தீர்ப்பு வழங்கிவிட்டனர் என கொள்ளலாமா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
– ஊர்க்குருவி.