25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

வீட்டில் ஒரு விசேஷம் என்றால், அது வாழ்க்கையில் எப்போதாவது ஒருதடவைதான் வரும்.
அதனால் அப்படியொரு விசேஷம் வீட்டில் நடந்தால் வீட்டுக்கு ‘பெயின்ற்’ அடித்து அழகுபடுத்துவது வழமையானதுதான்.
அது திருமணமாக இருக்கலாம்.
அல்லது பிள்ளையின் பூப்புனித நீராட்டு விழாவாக இருக்கலாம்.
அவை ஒரு தடவை வருவன.
அலங்கரிக்கத்தான் வேண்டும்.
அதற்காக ஒவ்வோர் ஆண்டும் நடக்கின்ற பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு நாம் ஒவ்வொரு வருடமும் பெயின்ற் அடித்து வீட்டை அழகுபடுத்துவதில்லை.
ஆனாலும், எப்போதும் வீட்டை அழகாகவே வைத்திருப்போம்.
ஏனெனில், அது நமது வாழ்விடம்.
நமக்கு வாழும் வீடு எத்தகையதோ அதேபோலத்தான் மரணித்தவர்களின் வாழ்விடம் – அவர்கள் துயிலும் இல்லங்கள்.
அதனால்தான் மேலைநாடுகளில் உள்ள சேமக்காலைகள் மிக அழகாக பேணப்படுவதுண்டு.
மாவீரர் நாளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன.
ஆங்காங்கே உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்போது சிலரின் தலைகள் தென்படுகின்றன.
சிரமதான பணிகளில் நமது தலைவர்கள் வேட்டியை மடித்துக்கட்டிவிட்டு, மண்வெட்டிகளுடன் ‘போஸ்’ கொடுக்கும் புகைப்படங்களை அவர்களே வெளியிட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.
சில வாரங்களுக்கு முன்னர், தியாகி திலீபனின் நினைவு தினம் வந்தது.
அவரின் நினைவிடத்தையும் இதுபோல துப்புரவு செய்தார்கள்.
பதின்மூன்று நாட்கள் அந்த இடம் நமது மக்களைவிட அரசியல்தலைவர்களால் களைகட்டியிருந்தது.
அதிலும் அரசியல் செய்ய முற்பட்டு திலீபனை கேவலப்படுத்தியது வேறு சங்கதி.
ஆனால், அவரை நினைத்தார்கள்.
அத்தோடு சரி.
இனி அடுத்த வருடம் அந்தப் பகுதிக்கு வருவார்கள்.
இப்போது அடுத்து, மாவீரர் வாரம்.
அந்த வாரத்திலும் எங்கெங்கே தள்ளுமுள்ளுகள், ஏட்டிக்குப் போட்டியான வைபவங்கள் நடைபெறுகின்றனவோ தெரியவில்லை.
ஆனால், இப்போது அவற்றை துப்புரவு செய்கின்ற சிரமதானப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்தவேளையில் சில வருடங்களுக்கு முன்னர், நல்லாட்சி காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடந்த சம்பவம் ஒன்று குறித்து நண்பர் ஒருவர் எழுதியது இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது.
அந்தக் காலத்தில் இப்படியொரு பத்தியை எழுதவில்லை என்பதால் அப்போதே அதனைப் பதிவுசெய்ய முடியவில்லை.
ஓர் இளம்தாய் தனது குழந்தையுடன் அந்தத் துயிலும் இல்லத்துக்கு வந்திருந்தார்.
குழந்தைக்கு ஆறேழு வயதிருக்கும்.
‘அம்மா இங்கதான் நம்மட அப்பாவை வைச்சிருக்கினம் எண்டுதானே சொன்னீங்கள்.
அதுதான் நாம இங்க வந்திருக்கிறம்.
அப்ப இந்த ஆட்கள் எல்லாம் ஏன் வந்திருக்கினம்.?’ என்று கேட்டது குழந்தை.
‘அவைக்கும் அவையட சொந்தக்காரரை இங்கதான் வைச்சிருக்கினம்.
அதுதான் அவையும் வந்திருக்கினம்’ ‘நம்மட அப்பாவை வைச்ச இடத்திலை ஏன் அவையும் வைச்சவை?’ குழந்தை திரும்பிக்கேட்டது.
தாய் எப்படிச் சொல்வது என்று யோசித்துவிட்டு சொன்னார், ‘அவை எல்லோரும் நம்மட சொந்தக்காரர்தானே அதுதான் அவையும் இங்கை வைச்சிருக்கினம்.’ போராட்டம், மாவீரர் என்று விவரமாக சொல்லி விளங்கப்படுத்தக்கூடிய வயதல்ல அந்தக் குழந்தைக்கு.
தாய் சமாளிப்பதற்காக அப்படிச் சொல்லியிருக்க வேண்டும்.
குழந்தை திரும்பிக்கேட்டது, ‘நமக்கு இவ்வளவு சொந்தக்காரர் இருக்கினமா?’ தாய் தலையை மட்டும் ஆட்டி ஆம் என்பதுபோல பதில் சொன்னார்.
‘இவ்வளவு சொந்தக்காரர் இருக்கேக்க, ஏன் அம்மா நம்மட வீட்ட ஒண்டும் சமைக்காம இருக்கிற நாளையில அவையிட்டையாவது சாப்பாடு வாங்கித் தரலாமே?’ தாய்க்கு அழுகையை அடக்கமுடியவில்லை.
இதுதான் நண்பர் எழுதியது.
துயிலும் இல்லங்களை வருடம் ஒரு தடவை சுத்தம் செய்வதும், அந்த ஒருநாளில் மாத்திரம் அதனை நினைப்பதையும் தமது வருடாந்த கடமைகளில் ஒன்றாக நினைக்கும் நமது அரசியல்வாதிகள் அவற்றை தினமும் சுத்தமாக வைத்திருக்கவும் முயற்சிக்க வேண்டும்.
அதைவிட முக்கியமானது, தமது சொந்தங்களை அந்த துயிலும் இல்லத்தில் தொலைத்துவிட்டு வாழ வழியின்றி இன்றும் அல்லல்படும் அவர்களின் சொந்தங்களையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles