உள்ளூராட்சி தேர்தலுக்காக இரண்டாவது தடவையும் திகதி அறிவிக்கப்பட்டபோதே, தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகத்தை நாம் வெளிப்படுத்தியிருந்தோம்.
அதேபோலவே, தேர்தல் மீண்டும் ஒரு தடவை ஒத்திவைக்கப்படலாம் என்பது இப்போது உறுதியாகி வருகின்றது.
போதாக்குறைக்கு, உரிய முறையில் அறிவிப்பு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதியும் தெரிவித்திருக்கிறார்.
‘அறிவிப்பே இல்லாத உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்காலத்தில் ஒழுங்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு நடைபெறும்’ என்கிறார் அவர். தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்ட போதிலும் ஜனாதிபதியோ அதனை உரிய அறிவிப்பு இல்லாத தேர்தல் என்கிறார்.
ஆக, உள்ளூராட்சி தேர்தல் என்பது அண்மைக்காலத்தில் நடக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. வரும் பத்தொன்பதாம் திகதி முதல் மாநகர சபைகள் ஆணையாளரின் கீழும், நகரசபை, பிரதேச சபைகள் செயலாளர்களின் நிர்வகத்தின் கீழும் வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆக, மக்கள் பிரதிநிதிகளால் அன்றி அரச அலுவலர்களால் அவை நிர்வகிக்கப்படவிருக்கின்றன. இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கொஞ்சம் கோபமாகவே பேசினார்.
‘தினமும் இந்த கோதாரி தமிழ் கட்சிகளைப் பற்றியே எழுதிக் கொண்டிருக்கின்றீர்களே. கடந்த சில நாட்களாக தொழில்சங்கங்கள் தொடர்ந்து வேலைகளை புறக்கணித்துக்கொண்டு, அரசியல்வாதிகளுக்குப் போட்டியாகத் தாமும் மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்களே.
அதைப்பற்றி ஏதும் எழுதுகிறீர்கள் இல்லையே’ என்றார் சினத்துடன்.
இந்தப் போராட்டங்கள் தொடர்பாக இரண்டு ஆசிரியர்கள் கூட சில தினங்களுக்கு முன்னர் என்னிடம் தமது எரிச்சலை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
கோட்டாபய அரசாங்கம் வரிகளை இரத்துச் செய்த பின்னர், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, வரிகளை இரத்துச் செய்ததால்தான் நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்தது என்று கூக்குரலிட்டவர்கள், இப்போது ரணில் அரசாங்கம் வரிகளை விதிக்கின்றபோது அதற்கு எதிராகவும் கூக்குரலிடுகின்றார்கள்.
சரி, அதுதான் இருக்கட்டும், இப்போது ஆசிரியர்களும் இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, பாடசாலைகளை மூடச் செய்திருக்கிறார்கள்.
கொரோனா பெருந்தொற்று, பின்னர் ‘அறகலய’ என்று நாடு தொடர்ந்து அல்லோலகல்லோலப்பட்டதால் பாடசாலைகள் ஒழுங்காக இயங்கவில்லை.
கடந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணை மற்றும் ஆண்டிறுதி பரீட்சைகளும் கணிப்பீடுகளும் இப்போதுதான் நடந்துகொண்டிருக்கின்றன.
தெற்கில் இலங்கை ஆசிரியர் சங்கம் இந்தப் போராட்டத்தை அறிவித்தது.
அந்த சங்கம் எந்த அரசியல் கட்சியின் பின்னணியில் இயங்குகின்றது என்பதும் இரகசியமானதல்ல.
அதன் பொதுச் செயலாளராக இருக்கும் ஜோசப் ஸ்ராலின் எப்போதாவது அசிரியராக பாடசாலையில் பணியாற்றினாரா என்பதும் தெரியவில்லை.
இந்த சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளர். அந்த சங்கம் முன்னெடுக்கும் போராட்டங்களால் தமிழ் மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுவது தொடர்பாக அந்தக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதும் தெரியவில்லை.
அதுவல்ல நாம் இன்று இந்தப் பத்தியில் சொல்ல வருவது.
இந்தப் போராட்டத்தில் நமது தமிழர் ஆசிரியர் சங்கமும் சேர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த பல தசாப்தங்களாக நமது மண்ணில் இடம்பெற்ற யுத்தத்தால் நமது கல்வி முற்றிலுமாக சீரழிந்து, இப்போது தான் சற்று தலைநிமிரத் தொடங்கியிருக்கின்றது.
இந்த நேரத்திலும் இதுபோன்று பாடசாலைகளை இழுத்து மூடி போராட்டம் நடத்துவதால் சாதிக்கப்போவது என்ன என்று அவர்களைக் கேட்காமல் இருக்க
முடியவில்லை.
எதிர்கால சந்ததியின் கல்வியைப் பாழாக்கி நடத்தப்படும் இந்த போராட்டங்களால் – ரணிலுக்கோ, ராஜபக்ஷவுக்கோ, அரசாங்க அமைச்சர்களுக்கோ தனிப்பட்ட முறையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தமுடியும் என்பதையும் அவர்கள் விளக்கவில்லை.
இந்தப் போராட்டங்களால் பாதிக்கப்படப்போவது எமது நாட்டின் சாதாரண குடிமக்களே அன்றி வேறு எவரும் அல்ல என்பதே உண்மை.
தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் இதுபோன்ற போராட்டங்களை நடத்துகின்றபோது வீதியில் நின்று போராடுவார்களே தவிர, பாடசாலைகள் மூடப்படுவதை அனுமதிப்பதில்லை.
அந்த பெரும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த மிக நெருக்கடியான காலத்தில்கூட, பாடசாலைகள் சீராக இயங்குவதை விடுதலைப் புலிகளும் ஏனைய போராட்ட இயக்கங்களும் எப்போதும் உறுதிப்படுத்தின.
ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என்பதிலோ அல்லது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதிலோ மாற்றுக்கருத்து இருக்கமுடியாது தான்.
ஆனால், அது தொடர்பான கோரிக்கையை முன்வைப்பதற்கும் அதற்கான போராட்டங்களை நடத்துகின்றபோதும் சரியான முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.
நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது அந்த நெருக்கடியிலிருந்து நாடு மீண்டெழ நாமும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டுமே தவிர, உடனடியாக ஈடேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதற்கு இது சரியான நேரமா என்பதையும் யோசிக்க வேண்டும்.
கோட்டாபய ஆட்சியில் இருந்துபோது தமக்கு சொல்லொணா துன்பங்கள் ஏற்பட்ட போது, மக்கள் அதற்கு எதிராக வீதிக்கு வந்தார்கள்.
ஆனால், இன்று போராட்டங்கள் என்ற பெயரில் தம் மீது துன்பங்கள் சுமத்தப்படும்போது மக்கள் எரிச்சல்படுகின்றார்கள்.
போராட்டக்காரர்களுக்கு எதிராகவே மக்கள் வீதிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதனை அறிந்ததால்தானோ தெரியவில்லை.
ஜே. வி. பியின் தொழில்சங்க பிரிவு தலைவர் லால்கந்த, தொழில்சங்கங்களின் நேற்றைய ஒருநாள் போராட்டத்துக்கு மாத்திரமே தாங்கள் ஆதரவு வழங்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்.
- ஊர்க்குருவி