27.7 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

ஒரு காட்டில் ஓர் இளைஞன் நடந்து போய்க்கொண்டிருந்தான்.
அவனுக்குப் பசியெடுத்தது.
ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.
மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன.
அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்றபோது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்துவிட்டது.
சட்டென்று சுதாகரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.
குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.
ஏற்கனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு ‘யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான்.
உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்துவிட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார்.
மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார்.
அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.
கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது.
‘பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு’, என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.
மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாகப் பற்றிக் கொண்டு ‘நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விடமாட்டேன்’, என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.
இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறிவிட்டான்.
விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான்.
அவரை சரமாரியாகத் திட்டினான்.
‘ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?’, என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக்கொண்டே ‘தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்’, என்றார்.
இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார் ‘நான் உன்னை முதலில் பார்த்தபோது நீ பயத்தால் உறைந்துபோயிருந்தாய்.
உன் மூளை வேலை செய்யவில்லை.
நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.
யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கிவிட்டாய்.
உன்னை உன்னாலேயே காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை.
உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.
அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்’, என்று சொல்லிவிட்டுத் தன் வழியே அவர் போய்விட்டார்.
அண்மைக்காலமாக தமிழரசு பற்றி இந்தப் பத்தியில் எழுதுவதைப் பார்த்த பலரும் ஏதோ தமிழரசை வேண்டுமென்றே விமர்சிப்பதாகவும் வேறு ஒரு கட்சிக்கு ஆதரவாகவே இதைச் செய்வதாவும் குறைப்பட்டுக்கொள்கின்றனர்.
நேற்று முன்தினம் சசிகலா ரவிராஜ் அவர்களின் முகநூல் பதிவு பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
அதில் அவர் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவிதானா என்று நான் எழுதியிருந்ததைப் பார்த்துவிட்டு ஒருவர் அவருக்கு ‘மாமனிதர்’ விருது கொடுத்தவர் யார் என்று கேட்டு ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.
இந்த உலகத்திலேயே ‘மாமனிதர்’ விருது கொடுத்தவர் ஒருவர்தான்.
அவரே அந்த விருதையும் ரவிராஜூக்கு கொடுத்தார் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்றால் அதற்கு இந்த ஊர்க்குருவி என்ன செய்வது?.
தமிழரசு பற்றி அண்மைக் காலமாக நாம் எழுதிவருவது, அந்தப் பாரம்பரிய கட்சி தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதால் மட்டுமே.
தமிழரசு பற்றி ஒருநாள் எழுதியதைப் படித்துவிட்டு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் தோழர் சுகு தொலைபேசியில் தொடர்புகொண்டு சொன்னார், ‘தமிழரசின் தலைவர் அமிர்தலிங்கத்தின் வீடு எப்போதும் மக்களுக்காக திறந்தே இருக்கும்.
அப்படிப்பட்ட தலைவர்களால்தான், தமிழ்த் தேசியம் இன்றுவரை நிலைத்து நிற்கின்றது.
ஆனால், இன்றுள்ள தலைவர்கள், சாமான்யர்கள் நெருங்க முடியாதவர்களாக அல்லவா இருக்கிறார்கள்’ என்று.
அத்தகையவர்களிடம் கட்சி சென்றடைந்துவிடக்கூடாது என்பதே இந்த ஊர்க்குருவியின் நோக்கமும்.
அதனால்தான் அந்தக் கட்சி பற்றி அடிக்கடி எழுதவேண்டி வருகின்றது.
எங்கள் முயற்சி எல்லாம் மேலே மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இளைஞனை காப்பாற்ற அந்த வயோதிபர் எடுத்த முயற்சி போன்றதுதான்.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles