சரியோ பிழையோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான் தினசரி அரசியலை செய்து கொண்டிருக்கின்றது.
தமது சக்தி இவ்வளவுதான் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் காட்டினாலும்கூட துணிச்சலுடன் போராட்டங்களை அறிவிப்பதும் அன்றாடம் நடக்கும் விடயங்களால் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற அவலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுவதிலும் முன்னணி தயக்கம் காட்டுவதில்லை.
மற்றைய தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாம் ஊடக அறிக்கைகள் அல்லது ஊடக சந்திப்புக்களுடன் தமது வேலை முடிந்தன என்ற பாணியில் அரசியல்
செய்துகொண்டிருக்கின்றன.
அதுபற்றி சில நாட்களுக்கு முன்னர் இந்தப் பத்தியிலும் தெரிவித்திருந்தோம்.
அதனால்தான் என்று நாம் சொல்லப்போவதில்லை, ஆனால், திடீரென்று நித்திரையிலிருந்து எழும்பியதுபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியினர் தமது மத்திய குழுவைக் கூட்டி இன்றைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன், அடுத்த வருடம் நடக்கவிருக்கும்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரைக் களம் இறக்குவதென்றும் முடிவெடுத்திருக்கின்றனர்.
பொதுவேட்பாளரை களமிறக்கும் முயற்சியை கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் சில அரசியல் மதியுரைஞர்கள் குழு ஒன்று முயற்சி செய்ததும் அது
தோல்வியில் முடிந்ததும் நாம் மறந்துவிட்டவை அல்ல.
ஆனால், அவர்கள் அப்படியொரு முயற்சியை எடுத்தபோது அது சரியான முயற்சி என்று நாமும் பாராட்டியிருந்தோம்.
அந்த முயற்சியில் இறங்கியவர்கள் மிகக்குறுகியகால இடைவெளியில் அதனை ஆரம்பித்தது தான் அந்த முயற்சி வெற்றிபெறாமல்போனதற்கு முக்கிய காரணம்
என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இன்று மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை நாம் எதிர்கொள்ளவிருக்கின்றோம்.
அதுவும் தெற்கில் ஒரு பலமான வேட்பாளர் ஒருவர் இதுவரை காணப்படாத நிலையில் பல வேட்பாளர்கள் களம் இறங்கலாம் என்று ஆரூடம் கூறப்படும் நிலையில் சிறுபான்மையினரின் வாக்குகள் அடுத்த தேர்தலில் வெற்றியைத்தீர்மானிக்கின்ற வாக்குகளாக இருக்கும் என்று நம்பப்படுகின்ற ஒரு சூழலில் இந்த தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் பலரின் கவனத்தையும் பெற்றிருக்கின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் ஊர்க்குருவியும் இந்தப் பத்தியில் அப்படியொரு யோசனையை முன்வைத்ததுடன் அதற்கு பொருத்தமான வேட்பாளர்
சம்பந்தன் ஐயாதான் என்றும் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
தந்தை செல்வா எப்படி தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு தமிழீழம்தான் என்பதை கூறி விட்டு அதற்காக மக்கள் ஆணையைப் பெறுகின்ற வகையில் தேர்தல் ஒன்றைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தாரோ, அதேபோல தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை சமஷ்டி கட்டமைப்பைக் கொண்ட ஓர் அமைப்பு முறை
தான் என்பதை ஒரு தேர்தல் மூலம்- அதாவது ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு போல இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றும்,
சம்பந்தன் காலத்தில் தீர்வு சாத்தியமாகாது விட்டாலும் அவர் காலத்தில் தமிழ் மக்களின் விருப்பத்தை உலகறியச் செய்கின்ற வகையில் இந்த
ஜனாதிபதி தேர்தலை அவர் பயன்படுத்த வேண்டும் என்றும் அப்போது இந்தப் பத்தியில் எழுதியிருந்தோம்.
இப்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு- அதிலுள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்கள்கூடி அத்தகைய முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால், அவர்கள் அந்த முடிவை செயல்படுத்துவதை நோக்கி அர்த்தபுஷ்டியுடன் பயணிக்கவேண்டும்.
அதற்கு தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கும் அனைத்துக்கட்சிகளின் ஆதரவையும் பெற முயற்சிக்க வேண்டும்.
முக்கியமாக தமிழரசுக் கட்சியையும் அதன் பெருந்தலைவர் இரா. சம்பந்தனையும் அணுகி அவரின் சம்மதத்தைப் பெற முயற்சிக்கவேண்டும்.
அவர் போட்டியிட விரும்பவில்லை என்றாலும் அவர் சம்மதத்துடன் ஒருவரை வேட்பாளராக தெரிவுசெய்ய வேண்டும்.
அவர் போட்டியிடுவது இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாவதற்காக அல்ல தமிழ் மக்கள் தமது பிரச்னைகளுக்கு தீர்வாக இந்த நாடு ஒரு சமஷ்டி
கட்டமைப்பின் கீழ் இருக்க வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம்- அதாவது இந்த ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்களின் கருத்துக்கணிப்பாகக்
கொண்டு தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொள்ளவேண்டும்.
அவ்வாறு பொதுவேட்பாளர்களம் இறங்கும் நிலை வரும்போது, தமிழ் மக்களின் வாக்குகளுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் எம்மை- எமது வேட்பாளரை நாடி வருகின்ற ஒரு நிலைமை ஏற்படலாம்.
அதனை எமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த யோசனையை வழமைபோல தமிழ் அரசியல் கட்சிகள் வெறுமனே கடந்து செல்லக்கூடாது.
-ஊர்க்குருவி.