‘ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு – செலவுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்ததை வாசகர்கள் கவனித்திருப்பார்கள்.
நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததற்கு அவரது தந்தை மகிந்த ராஜபக்ஷவும் சிறிய தகப்பன்மார்களான கோட்டாபய ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ ஆகியோரே பிரதான காரணம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
வரவு – செலவுத்திட்டம் தொடர்பாக அவர் தெரிவித்திருக்கும் கருத்து, தாங்கள் இப்போதும் ஆளும் கட்சி என்பதையும் அவர் பதிவுசெய்திருக்கிறார்.
அதுமாத்திரமல்ல, அவரது அந்தக் கருத்து தொடர்பாக சிங்கள நண்பர் ஒருவர் கருத்து தெரிவித்தபோது, ஆளும் கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்க்கட்சி போல அவர் செயற்படுவது, ஒரு பயிற்சிதான் என்றார்.
அதாவது எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கான பயிற்சி என்கிறார் அந்த நண்பர்.
ராஜபக்ஷ குடும்பத்தில் நீண்டகாலமாகவே மகிந்தவுக்கு பின்னர் யார் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து தலைவராவது என்பதில் ஒரு குழப்பம் நிலவி வந்தது தெரிந்ததுதான்.
பதினைந்தில் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் மைத்திபால சிறிசேனவிடம் தோல்வியடைந்து அம்பாந்தோட்டை திரும்பிய பின்னரும், மகிந்த என்ற அந்த விம்பத்தை வைத்தே தாங்கள் அரசியலில் மீண்டும் வரமுடியும் என்பதால் அனைவரும் அவர் பின்னால் அணிதிரண்டபோதிலும், கோட்டாவும் பஷிலும் அடுத்த
தலைவராவது யார் என்பதில் உள்ளுக்குள்ளே போரிட்டுக் கொண்டேயிருந்தனர்.
மகிந்தவின் தெரிவு நாமல் தான் என்றபோதிலும், நாமல் நாட்டுக்கு தலைமை தாங்குவதற்கு அப்போதைக்கு முடியாது என்பதால், அதற்கு அவர் பொருத்தமான ஆளாக – தயாராகி வரும்வரை யாரிடம் இடைக்கால ஏற்பாடாக தலைமையைக் கொடுப்பது என்பதில் மகிந்த, சற்று குழப்பமான நிலையிலேயே இருந்ததாக அந்தக்
காலத்தில் கூறப்படுவதுண்டு.
பலரும் சமல் ராஜபக்ஷவையே இடைக்காலத் தலைவராக தெரிவுசெய்ய விரும்பிய போதிலும், அது நாமலின் எதிர்காலத்திற்கு தடையாக வந்துவிடலாம் என்ற பயம் மகிந்த தரப்பிற்கு இருந்ததாக கூறப்பட்டது.
அதற்கு காரணம், நாமலுக்கு முன்னதாகவே அரசியலுக்கு வந்த சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷசீந்திர, தென் மாகாணசபையின் முதலமைச்சராகவும் இருந்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
அதனால்தான் இடைக்கால ஏற்பாடாக சாமல் ராஜபக்ஷவை தெரிவுசெய்தால், அவர் தனக்கு பின்னர் தனது மகனை முன்நிறுத்திவிடலாம் என்ற பயம் மகிந்த தரப்பிற்கு இருந்தது.
அதனால்தான் அவர்களின் தெரிவு கோட்டா மீது திரும்பியது.
கோட்டாவின் புதல்வர் அமெரிக்காவில் இருப்பதும் அவர் அரசியலில் அறவே விருப்பமின்றி இருப்பதும் அதற்கு காரணமாகவும் இருக்கலாம்.
இவை எல்லாம் பழைய சங்கதிகள்.
ஆனால் இப்போது ராஜபக்ஷ சாம்ராஜ்யம் சரிந்து விட்ட பின்னரும் மீண்டும் அதனை தூக்கி நிமிர்த்தலாம் என்ற நம்பிக்கையில் காய்நகர்தி வரும் ராஜபக்ஷவினர், அடுத்த தேர்தலில் எப்படி இயங்குவது? யாரை இனி முன்நிலைப்படுத்துவது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சியாக அண்மையில் நான்கு சகோதரர்களும் சந்தித்திருப்பதாகவும், அந்தச் சந்திப்பில் தமது குடும்பத்தின் அடுத்த அரசியல் தலைமைக்கான வாரிசாக நாமல் ராஜபக்ஷவையே தெரிவுசெய்திருப்பதாகவும் அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
அதனையடுத்து, அடுத்த தேர்தலில் தாம் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது தெரிந்திருப்பதால், என்ன விலைகொடுத்தாவது எதிர்க்கட்சி தலைமையை அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுவிடவேண்டும் என்றும், அந்தப் பதவியில் நாமலை அமர்த்துவதன் மூலமே அவரது தலைமையை மக்கள்
மத்தியில் வளர்த்தெடுக்கலாம் என்றும் முடிவுசெய்திருக்கின்றனராம்.
அதனால்தான், நாமல் தற்போது ஆளும் கட்சியில் இருந்தாலும் தன்னை ஒரு எதிர்க்கட்சியாக நினைத்துக்கொண்டு அரசியல் செய்யத் தொடங்கியிருக்கின்றார் என்கின்றன அந்த வட்டாரங்கள்.
சிலவேளை, வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதும், நாமல் ஒரு அணியுடன் அரசிலிருந்து வெளயேறி எதிர்கட்சிபோல செயற்படலாம் என்றும் அவர்களுக்கு நெருக்கமான அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பொறுத்திருந்து பார்ப்போம்.
-ஊர்க்குருவி.