அண்மையில் பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நண்பர் ஒருவருடன் நீண்டநேரம் பலதும் கதைத்துக்கொண்டிருந்தோம்.
அப்போது அவர் சென்ன கதை ஒன்று இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது.
தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய சினிமாக்களுக்கு விடுதலைப் புலிகள் தடை வித்தித்திருந்த காலம்.
அப்போது அவர் பிரான்ஸிலிருந்து விடுமுறையில் யாழப்பாணம் வந்திருந்தாராம்.
நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த அவர், குடும்பத்துடன் மகிழ்வாக நாட்களைக் கழித்துப்கொண்டிருந்த போது, ஒரு நாள் வீட்டிலிருந்தவர்கள் தென்னிந்திய திரைப்படத்தை பார்க்க விரும்பியிருக்கின்றனர்.
அந்தக் காலத்தில் படம் பார்ப்பதெனில் வீடியோ கசெற்றில்தான் பார்க்கவேண்டும்.
அதற்காக வீடியோ டெக், படக்கொப்பி என்பவற்றை வாடகைக்கு எடுத்து படம் பார்த்துக்கொண்டிருந்தாராம்.
அங்கே வந்த விடுதலைப்புலி போராளிகள், தடைசெய்யப்பட்ட படத்தை பார்த்ததற்காக பெரிய தொகை பணத்தை அபராதமாக செலுத்துமாறு கேட்டுப்பெற்றதுடன், வீடியோ சாதனைங்களையும் தம்மோடு எடுத்துச் சென்று விட்டனராம்.
அவர் அந்தப் படத்தை அரைவாசிப்பகுதிதான் அப்போது பார்த்து முடித்திருந்தார்.
அவர் பிரான்ஸ் திரும்பிய பின்னர், விடுதலைப் புலிகள் சொந்தமாக நடத்திய ‘லுன் இன்ரர் நெசனல்’ என்ற கடையில் அந்தப்படத்தின் பிரதியை வாடகைக்கு
எடுத்து படத்தின் மிகுதியை பார்த்து முடித்தாராம்.
அந்த நண்பர் சொன்னது உண்மையா அல்லது அவரது கற்பனையா என்பது தெரியவில்லை.
ஆனால், ஒரு காலத்தில் தாயகத்தில் தென்னிந்திய சினிமாக்கள் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கின்றன என்று அவற்றை தடைசெய்திருந்ததும்,
அதேவேளையில் புலம்பெயர் நாட்டில் தென்னிந்திய திரைப்படங்களை இறக்குமதி செய்து அவற்றை திரையிடும் வர்த்தகத்தை விடுதலைப் புலிகளே ‘லுன்
இன்டர்நேசனல்’ என்ற நிறுவனத்தின் மூலம் செய்து கொண்டிருந்ததும் நடந்து முடிந்த வரலாறுகள்.
தாயகத்திலுள்ள மக்களுக்கு தென்னிந்திய திரைப்படங்கள் அவர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கின்றன என்பது உண்மையானதாக இருக்கலாம்.
ஆனால் அந்த விடுதலைப் போராட்டத்துக்கு தூண்களாக இருந்தவர்கள் புலம்பெயர் தமிழர்கள்.
அவர்களின் நிதிப்பங்களிப்பு அந்தப் போராட்டத்திற்கு முக்கிய வகிபாகத்தை வகித்ததும் தெரிந்தவைதான்.
ஆனால் அவர்கள் மத்தியிலும் திரைப்படங்கள் விடுதலை உணர்வை மழுங்கடிக்கத்தான் செய்தன.
ஆனாலும் அவற்றை அங்கே தடைசெய்ய நினைத்திருந்தாலும் அதனைச் செய்திருக்கமுடியாது.
அதனால் தான் அதனையே எப்படி நமக்கு பயனுள்ளதாக்கலாம் என்று விடுதலைப் புலிகள் சிந்தித்திருக்க வேண்டும்.
அந்தச் சம்பவம்தான் அந்தச் செய்தியைப் படித்தபோது நினைவிற்கு வந்தது.
யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவர் திறக்கவிருக்கும் கல்வி நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அடுத்தமாதம் பிரபல
தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசைநிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருக்கின்றது.
அந்த நிழ்ச்சியில் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு கலந்துகொள்வதற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலத்த கண்டனக்குரல்கள் ஒலிக்கின்றன.
முதலில் அந்த கல்வி நிலையத்தை ஆரம்பிப்பவர் கனடாவில் வாழும் ஓர் ஈழத்தமிழர்.
கனடாவில் மிக உயர்ந்த நிலைக்கு சென்ற தொழில் அதிபர்களில் ஒருவர்.
அதுமாத்திரமன்றி அவரது மனைவி ஒரு காலத்தில் முன்னணி திரைப்பட நடிகையாக இருந்தரம்பா.
யாழ்ப்பாணத்தில் தாம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றுக்காக ரம்பா அழைத்தால் அவரது அழைப்பை அவர்காலத்தில் சினிமாவில் இயங்கிய யாரைக் கேட்டிருந்தாலும்
அவர்கள் தவறாது சம்மதித்திருப்பார்கள்.
அதனால்தானோ என்னவோ அவர் தனது நண்பியை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைத்திருக்கலாம்.
அதைவிட இன்று இந்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக கட்சியின் முக்கிய தமிழகத் தலைவர்களில் குஷ்புவும் ஒருவர்.
அவர் கலந்து கொள்வது ஏதாவது ஒரு வகையில் தமிழர்களுக்கு உதவுவதற்கும் வழியமைக்கலாம் என்றும் அவர் நினைத்திருக்கலாம்.
ஆனால் அவர் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று எப்போதோ ஒரு பேட்டியில் தெரிவித்தார் என்பதற்காக சிலர் ‘பற்ற வைத்த’ நெருப்பு இப்போது
அவரை அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பதை நிறுத்துமளவிற்கு சென்றிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் பற்றிய குஷ்புவின் அந்தக் கருத்து, அவர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த காலத்தில் தெரிவித்தது.
தனது கட்சியின் தலைவர் ஒருவரை படுகொலை செய்த அமைப்பு தொடர்பாக அவர் அந்த நேரத்தில் அப்படித்தான் செல்லியிருக்கவேண்டும் என்பதைக் கூட நம்மால் சிந்திக்க முடியவில்லை என்றால் அதனை எப்படி புரிந்துகொள்வது என்று தெரியவில்லை.
குஷ்பு தொடர்பாக இப்போது கேட்கும் கூச்சல்களை கேட்கின்றபோது அண்மையில் தமிழகம் சென்றிருந்த நமது தலைவர் ஒருவர் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் என்ற வகையில் அவரைச் சந்தித்து ஈழத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கள் குறித்து விளக்கமளித்ததுதான் ஞாபகத்திற்கு வருகின்றது.
விடுதலைப் புலிகள் தாயகத்தில் தென்னிந்திய திரைப்படங்களை தடைசெய்து வைத்திருந்த ஏக காலத்தில் புலம்பெயர் மண்ணில் அதனை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை முன்னுதாரணமாக கொண்டு நம்மவர்கள் சிந்திக்க வேண்டும்.! அவரைச் சந்தித்த அந்தத் தலைவர் போல!!.
-ஊர்க்குருவி.