நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. திறந்து பார்த்தால் தெல்லிப்பழையில் ஆறு. திரு முருகனார் நடத்தும் சிறுவர் இல்லம் மூடப்பட்டதாக வெளிவந்த பத்திரிகையின் பிரதி. கூடவே ‘என்ன நடக்கிறது என்று பாருங்கள்’ என்ற குறிப்பு வேறு. செய்தியை முழுமையாக படித்த பின்னர், அவருக்கு ஒரு குறிப்பை அனுப்பினேன்.
என்ன நடந்தது என்பது பற்றி வேறு எவரிடமும் கேட்காமலே செய்தியிலிருந்து புரிந்துகொண்டதை வைத்துக்கொண்டு, நான் அனுப்பிய குறிப்பில், மலையகத்திலிருந்து வந்த பிள்ளைகள் குளிப்பதற்காக தற்காலிக மாக ஏற்பாடு செய்யப்பட்ட தொட்டியை கமராவுக்கு முன்னால் வைத்தது தவறாக இருக்கலாம். கமராவையோ அல்லது குளியல் தொட்டியையோ மாற்றிவைக்குமாறு சொல்வதற்கு பதிலாக அந்த இல்லத்தையே எதற் காக மூடவேண்டும்? என்று அந்த நண்பரிடமே கேட்டு எழுதினேன்.
தெல்லிப்பழையில் துர்க்கை அம்மன் கோவில் கட்டப்பட்ட பின்னர், அந்த ஆலயம் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தது. அந்தப் பணியைத் தொடக்கி வைத்தவர் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார். அவர் ஆலயத்தை அமைத்து அதனுடன் சேர்ந்து மகளிர் இல்லம், முதியோர் இல்லம் என்று சமூகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரின் அந்தப் பணிகளை விதந்து பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதிய கட்டுரை ஒன்று அப்போது ஞாபகத்துக்கு வந்தது.
அந்த வேளையில் இன்னுமொரு விடயம் ஞாபகத்துக்கு வருவதையும் தவிர்க்கமுடியவில்லை. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து ஒலித்த தமிழ் வானொலி ‘வெரித்தாஸ்’ பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அந்த வானொ லியில் தொண்ணூறுகளின் கடைசிப் பகுதியில் இயக்குநராக இருந்தவர் அருட்பணியாளர் ஜெகத் கஸ்பர் ராஜ் அடிகளார்.
ஒரு தடவை அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி என்ற ‘அம்மா’பற்றி பேச்சு வந்தபோது அவர் சொன்னார்: ‘மனிதர்கள் தங்களைக் கடவுள்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இந்த மேல்மருவத் தூர்காரர் ஒரு தமிழன் என்பதாலும், அவர் என்ன செய்தாலும் அதனோடு மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகம், வைத்தியசாலை என்று சமூகப் பணி யாற்றுவதாலும் அவரை நான் ஆதரிப்பதுண்டு’ என்றார்.
ஆலயங்கள் இவ்வாறு ஆன்மீகப் பணிகளோடு சமூகப் பணிகளில் ஈடுபடுவது அரிது. ஆனால், அவ்வாறு ஈடுபடும் சேவையை நமது மண்ணில் தொடக்கி வைத்தவர் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார். அவர் தொடக்கிவைத்த அந்தப் பணியை இன்றும் தொடர்வதோடு, இன்னும் அதிகமாக – நமக்கு எது தேவையோ அவற்றை உய்த்து உணர்ந்து செய்து வருகிறார் ஆறு. திருமுருகனார். யாழ்ப்பாண நகரத்தின் நுழை வாயிலான நாவற்குழியில் திருவாசக அரண்மனை, அரும்பொருட்காட்சியகம் என்பன அவரின் இந்தப் பணிகளை பறைசாற்றுகின்றன.
அவரின் பணிகள் பற்றி அவ்வப் போது சிலர் விமர்சித்து வரும்போது, ‘காய்க்கின்ற மரத்துக்கு கல் எறி விழத்தான் செய்யும்’ என்று எண்ணுவதுண்டு. ஒரு பணியை அல்ல, பல பணிகளை ஒரே நேரத்தில் செய்கின்ற போது அவற்றில் தவறுகளை தேடிப் பிடிக்க நினைத்தால் பிடித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்கின்றவர்கள், சமூக அக்கறையோடு செய்யாமல், தமது சொந்த விருப்பு – வெறுப்புகள் காரணமாக ‘கல் எறி’கின்றபோது அவற்றை கடந்து செல்ல முடியவில்லை.
இப்போது அவர் தனது சட்டத் தரணி மூலம் குறித்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையிடம் நஷ்ட ஈடு கோரி கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்தக் கடித்தில் அவர் குறிப்பிட்டிருக்கின்ற ஒரு விடயம் மிகவும் கவனத்திற்குரியது. அந்தப் பத்திரிகை அலுவலகம் அமைந்திருக்கின்ற காணிக்கு ஒரு காலத்தில் சொந்தக்காரர்கள், முதல் தமிழ் சட்டமா அதிபரான சிவா பசு பதி குடும்பத்தினர். அந்தக் காணியில் அவர்கள் கட்டிய புதிய வீடும் அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பழைய வீடும் இருக்கின்றது.
அங்கே யுத்த காலத்தில் சில நாட் கள் விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் குடியிருந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் அங்கிருந்து வெளியேறிய பின்னர், அது அந்தப் பத்திரிகை நிறுவனத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில் அவர்கள் அதனை விற்பதற்கு முயன்ற போது, தாங்கள் அங்கே பல தசாப்தங் களாக இருப்பதால் தமக்கே தரவேண் டும் என்று பிடிவாதமாக இருந்ததால், அங்குள்ள புதிய வீட்டையும் அத னோடு இணைந்த காணியையும் மாத்திரம் அவர்களுக்கு விற்றுவிட்டு, தமது பரம்பரை வீட்டையும் அத னோடு இணைந்த காணியையும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் சிவபூமி அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கின்றனர். கூடவே, அந்த பழையவீட்டில் வைத்து அன்னதானம் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டிருக்கின்றனர்.
இதனால் குறித்த பத்திரிகைக்கும், தொல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான சிவபூமி அறக்கட்டளைக்கும் (அதன் தலைவர் ஆறு. திருமுருகனுக் கும்தான்) இடையே சில காலமாக நடந்துவரும் இழுபறியைத் தொடர்ந்தே இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக நகரத்தில் பேசப்பட்டுவந்தது.
இந்த நிலையில் ஆறு. திருமுருக னார் அனுப்பியுள்ள கேள்விக்கடிதத்திலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்த குரோதம் காரணமாகவே அவ்வாறு தவறான செய்தியை பிரசுரித்ததாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இவையல்ல இங்கே நாம் கவனிக்க வேண்டியது, ‘ஆறு. திருமுருகனால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் இழுத்து மூடல்’ என்று தலைப்பிட்டு செய்தி வெளிவந்துள்ளபோதிலும், அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட் டிருந்ததுபோல, அந்த செய்தி வெளிவந்த தினத்துக்கு முன்னதாக அப்படி யோர் உத்தரவை ஆளுநர் விடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதுதான். இவற்றை பார்க்கின்ற போது, ‘சிலர் சொந்தக் காசில் சூனியம் வைப்பது’ என்று சொல்வது இதுபோன்றதைத்தானோ?
ஊர்க்குருவி.