அவர் ஒரு பிரபல அரசியல் பிரமுகர். சட்டத் தரணி, அரசியல் விமர்சகர். இப்படி பல முகங்களை கொண்ட அவர், ராஜபக்ஷக்கள் ஆட்சியிலிருந்த போது அவர்களின் சாம்ராஜ்யம் இல்லாமல் போகவேண்டும் என்பதற் காக கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் கடுமையாக உழைத்த ஒருவர். நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தனது ஆரூடங்கள் என்ற தலைப்பில் அவரின் முகநூலில் ஒரு பதிவை செய்திருந்தார்.
சிங்களத்தில் அவர் எழுதியிருந்ததை நண்பர் ஒருவர் வட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்ததால் அதனை திறந்து கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்த்து படித் துப் பார்த்தேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவுக்கு கிடைத்த அறுபத்தி ஒன்பது இலட்சம் வாக்குகள் எப்படியெல்லாம் போகலாம் – யார் யாருக்கு எவ்வாறு பிரிக்கப்படலாம் என்பது பற்றி தனது கூட்டல் கழித்தல்களை அவர் எழுதியிருந்தார். அது அவரின் கணிப்புத்தான் என்றாலும் அவர் அங்கே முக்கியமாக சொல்ல வந்தது – இந்தத் தடவை சிறுபான்மை மக்களின் வாக்குகள் (ஈழத்தமிழர், மலை யகத் தமிழர், முஸ்லிம்கள்) எவ்வாறு பகிரப்படும் என்பது பற்றியும் அதனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு கட்டத் தில் குறிப்பிட்டிருப்பவர் –
இன்னுமொரு தகவலையும் எச்சரிக்கையாக தெரிவித்திருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர், டான் தொலைக்காட்சி குழுமத் தலைவர் குகநாதன் தனது முகநூலில் எழுதியி ருந்த குறிப்பு ஒன்று இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது. சிங்கள மக்கள் தெரிவுசெய்யப்போகும் அடுத்த ஜனாதிபதி! என்ற தலைப்பில் இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் அவர் எழுதிய குறிப்பு இது: ‘சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் யாரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறமுடியாது என்று பலரும் எழுதிவருகின்றனர். ஒரு சின்னக்கணக்கு: பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்காளர்: 15,992,096 வாக்களிப்பவர்கள் அதிகபட்சம் 80 வீதம்: 12,793,676 வெற்றிபெறத் தேவையானவை: 6,396,839 தனி சிங்கள் வாக்காளர்கள்: 11,302,393 அவர்களில் வாக்களிப்பவர்கள் 80 வீதம்: 9,041,914 இந்த வாக்குகளில் 70.74 வீதம்: 6,396,839 ஆக, சிங்கள மக்களின் வாக்குகளில் 70.74 வீத வாக்குகளைப் பெறுகின்ற ஒருவரால் சிறுபான்மை யினர் வாக்குகள் ஒன்றுகூட இல்லாமல் ஜனாதிபதி ஆகிவிடமுடியும். இந்தத் தேர்தலிலும் சிறுபான்மையினர் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிப்பதை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பவில்லை என்று தெரிகின்றது.
பொறுத்திருந்து பார்ப்போம்!’ இதுதான் அந்தக் குறிப்பு. இது 2019 தேர்தலுக்கு முந்தைய கணக்கு. சிறுபான்மையினர் வாக்குகளால் தெரிவான மைத்திரிபால சிறிசேனமீதான வெறுப்பும் கோட்டாபய வெற்றிபெறுவதற்கு காரணமா னது. இப்போதும் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனை போட்டி நடைபெறும் என்ப தால், யாரும் ஐம்பது வீதத்தை பெறமாட்டார்கள் என்றும் சிறுபான்மையினர் வாக்குகள்தான் வெற்றி யைத் தீர்மானிக்கும் எனவும் எல்லோரும் திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்க, சிங்கள மக்கள் கடந்த தேர்தலில் முடிவெடுத்ததைப் போல இம்முறையும் முடிவெடுத்தால் என்ன நடக்கும்?
இந்தக் கேள்வியை மேலே குறிப்பிட்ட தெற்கின் அந்த அரசியல் பிரமுகரும் குறிப்பிட்டிருக்கின் றார். அப்படி முடிவெடுத்தால், அவர்களின் தெரிவு ஜே. வி. பி. ஆகத்தான் இருக்கும் என்கிறார் அவர். அன்றைய கோட்டாபயவுக்கு நிகராக – ஏன் அவரைவிட சற்றுக் கடுமையாகவே இவர்கள் இனவாத முகத்தை வெளிப் படுத்தி வருகின்றனர். அதனால்தான் அண்மையில் சுவீடன் சென்றிருந்த தேசிய மக்கள் சக்தி என்ற ஜே. வி. பியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க, கோட்டாபய வின் இடத்தை தன்னால்தான் நிரப்பமுடியும் என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
– ஊர்க்குருவி.