இலங்கை கொரோனாவின் மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டிருப்பதான அச்சம் எழுந்திருக்கின்ற சூழலில், சீனாவின் அதியுயர் குழுவொன்று, இலங்கையில் தரையிறங்கியிருக்கின்றது. சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான Yang Jicchi தலைமையிலான 26 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு இலங்கையில் தரையிறங்கியிருக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க தூதுவர் தெரிவித்த கருத்துக்களுக்கு சீனத் தூதரகம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. இவ்வாறானதொரு சூழலில், சீன உயர்மட்டக் குழுவின் விஜயம் அரசியல் ரீதியில் அதிக முக்கியத்துவம் மிக்கதாக நோக்கப்படலாம். இந்தக் குழுவினரின் சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கை சீனாவிடம் எதிர்பார்க்கும் 1.2 பில்லியன் கடன் தொகையின் இரண்டாவது பகுதியை பெறுவதற்கான இணக்கப்பாடு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவின் கடன் தொகையின் முதல் கட்டமான 500 மில்லியன் தொகை இந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்டது.
சீனாவிற்கு எதிரான உலகளாவிய அமெரிக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன. அண்மையில் சீன அரசிற்கு சொந்தமான 24 நிறுவனங்களை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தடைசெய்திருந்தது. இவ்வாறு தடைசெய்யப்பட்ட சீன நிறுவனங்களில், கொழும்பு துறைமுக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீன பொறியியல் நிறுவனமும் அடங்கும். சீன அரசு, கட்டுமானம் என்னும் பெயரில் அதன் ஒரு பாதைத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகின்றது. சீனாவின் திட்டங்கள் இரகசிய நோக்கம் கொண்டவை. அவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை. கட்டுமானத் திட்டங்களை ஒரு ஆயுதமாகவே சீனா பயன்படுத்தி வருகின்றது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே சீனாவின் நிறுவனங்கள் மீது தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்சியாகவே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா, இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவு வெளிப்படைதன்மை மிக்கதாக இருக்குமாயின், அதனை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் சீனாவிற்கும் – இலங்கைக்குமான உறவில் வெளிப்படைத்தன்மை இல்லை – அது சந்தேகத்துக்குரிய என்னும் கருத்தையே மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதன் காரணமாகவே இலங்கைக்கான சீனத் தூதகரம், அமெரிக்க தூதுவரின் கருத்தை கடுமையாக ஆட்சேபித்திருக்கின்றது. அமெரிக்க தூதுவரின் கருத்துக்கள் ராஜதந்திர நடைமுறைகளை மீறிவிட்டது – இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவுகள் தொடர்பில் முடிவெடுப்பதற்கான சுதந்திரம் இலங்கை மக்களுக்குரியது. அதில் தலையீடு செய்ய அமெரிக்காவிற்கு எந்த அதிகாரமுமில்லை என, சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே சீனா வழங்கிய கடன்களுக்கு பதிலாகவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் ஊழலும் மோசடிகளும் இடம்பெற்றதாக இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் வெளிப்படையாகவே விமர்சித்திருக்கின்றார். இவ்வாறானதொரு சூழலில்தான் ராஜபக்சக்கள் மீளவும் சீனாவிடம் கடனை பெறுகின்றனர். இது மேலும் இலங்கையை சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கவைக்கலாம் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து. ஆனால் கொழும்போ இதனை தொடர்சியாக மறுத்து வருகின்றது. அண்மையில் கூட ஜனாதிபதி கோட்டபாய புதிய வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் போது, சீனாவுடனான எமது உறவை வர்த்தக நலன்சார்ந்த ஒன்றாகவே நோக்க வேண்டும் ஆனால், இதனை சிலர் கடன்பொறியென்று வர்ணிக்க முயற்சிக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். சீனாவிடமிருந்து பெறும் ஒவ்வொரு கடன் தொகைகளும் இலங்கையை மேலும் சீனாவின் பிடிக்குள் தள்ளிவிடலாம். சீனாவின் பிடி இலங்கைக்குள் இறுகும் போது, இந்தியாவினதும் அமெரிக்காவினதும் பிடிகளும் இறுகலாம்.
ஆசிரியர்