இஸ்ரேல் மீது ரொக்கெட் வீசி ஹிஸ்புல்லா தாக்குதல்! போர் நிறுத்தம் நீடிக்குமா?

0
16

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இடையே இஸ்ரேல் மீது முதன்முறையாக ஹிஸ்புல்லா ரொக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் வடக்கே மவுண்ட் டோவ் பகுதி மீது ஹிஸ்புல்லா நேற்று 2 ரொக்கெட்களை ஏவி இவ்வாறு தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்ரோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

நூற்றுக்கணக்கானோர் பணயக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக காஸா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் காஸா பகுதியில் உயிரிழந்தனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது.

கடந்த ஆண்டு ஒக்ரோபரில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நடந்து வரும் மோதலில் பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனானில் 3,800இற்கும் மேற்பட்டோர் பலியாகினர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை லெபனானின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவலை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டார்.

லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்புக் கொண்டது.

எனினும், ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால், ஆயுதங்களை கையிலெடுக்க அவர்கள் முற்பட்டால், நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை வெளியிட்டார். இந்தச் சூழலில், இஸ்ரேல் விதி மீறலில் ஈடுபட்டு விட்டது என ஹிஸ்புல்லா அமைப்பு கூறியது.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் எல்லையையொட்டி அமைந்த இஸ்ரேலின் வடக்கே மவுண்ட் டோவ் பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று 2 ரொக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை காலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நிலையில், முதன்முறையாக ஹிஸ்புல்லா அமைப்பு ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த ரொக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ள ஹிஸ்புல்லா, இதனை இஸ்ரேலுக்கான எச்சரிக்கை எனத் தெரிவித்துள்ளது.

பெய்ரூட் நகர் மீது இஸ்ரேலின் கண்காணிப்பு விமானங்கள் பறந்தன. இதனால், போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது என அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூறி வந்த நிலையில், இந்த ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் கூறுகையில், ஹிஸ்புல்லாவின் விதிமீறலுக்கு பதிலடியாகவே, தேவையான உடனடி நடவடிக்கையாக, ஒப்பந்தம் அமுலாகும் வகையில் இஸ்ரேல் பணியாற்றி வருகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக கூறுவதென்றால், தெற்கு லெபனானில் ஆயுத மேந்திய ஹிஸ்புல்லா அமைப்பினர் அடையாளம் காணப்பட்டபோதோ அல்லது ஆயுத பரிமாற்ற முயற்சிகள் நடைபெறும்போதோ உடனடி நடவடிக்கை தேவையாகவுள்ளது எனக் கூறினார்.

இதேபோன்று, லிடானி ஆற்றுக்கு வடக்கே தன்னுடைய படைகளை ஹிஸ்புல்லா அமைப்பு நகர்த்த வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கும் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் நோயல் பேரட்டுக்கு, கிதியோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.