2019 ஏப்பிரல் 21ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலிகள் மீண்டும் தென்னிலங்கை அரசியலை கொதிப்படையச் செய்திருக்கின்றது. இந்த தாக்குதலை மேற்கொண்ட சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஷகிரான் குழுவினருடன், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக பல்வேறு சிங்கள அரசியல்வாதிகளும் அமைப்புக்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன. இவ்வாறானதொரு பின்புலத்தில் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கென சிறையிலடைக்கப்பட்டார். ஐந்து மாதங்களின் பின்னர், இவர் கடந்த வாரம் குற்றமற்றவர் என்னும் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தென்னிலங்கை அரசியலில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையாத சூழலில், இவர் எவ்வாறு விடுவிக்கப்பட்டார் – என்னும் கேள்விகள் ஆளும் பொதுஜன பெரமுன கட்சிக்குள் கடுமையான அதிருப்திகளை ஏற்படுத்தியிருக்கின்றது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100 பேர் கைத்தெழுத்திட்ட கடிதமொன்று, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் சர்ச்சைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் ரியாஜ் பதியுதினின் விசாரணையை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரிகளை முழுமையான ஆவணங்களுடன் சமுகளிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார்.
20வது திருத்தச்சட்ட மூலம் விரைவில் வாக்கெடுப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே, இவ்வாறானதொரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 20வது திருத்தச்சட்டத்தை ஆதரிப்பதற்கான ஒரு இரகசிய உடன்பாட்டுடன்தான் ரிஜாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவே ஆளும் தரப்பிற்குள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறான எந்தவொரு உடன்பாடும் இல்லையென்று ஜனாபதி கூறிய பின்னரும் இந்த விடயத்தில் பற்றிய தீ, இன்னும் அணையவில்லை.
ஜனாதிபதி தேர்தலின் போதும், நாடாளுமன்ற தேர்தலின் போதும் ஈஸ்டர் தாக்குதல் ஒரு முக்கிய பேசுபொருளாக இருந்தது. ரணில்-மைத்திரி அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பை நிர்மூலமாக்கிவிட்டது என்பதே, ஒரு பிரதான தேர்தல் பிரச்சாரமாக இருந்தது. இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஈஸ்டர் தாக்குதல் ராஜபக்சக்களின் மீள் எழுச்சியில் பெரும் பங்குவகித்தது. ரணில் – மைத்திரி அரசாங்கத்தின் பொறுப்பற்ற நிர்வாகம், உள் மோதல்கள் என்பன, ராஜபக்சக்களின் மீளெழுச்சியில் கணிசமாகச் செல்வாக்குச் செலுத்தியது உண்மையெனினும், ஈஸ்டர் தாக்குதலே பெரியளவில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது.
ஏனெனில் 2009இல் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இலங்கைத் தீவில் ஒரு சிறு குண்டுவெடிப்புச் சத்தமும் கேட்டதில்லை. நாடு மிகவும் அமைதியாக இருந்தது. இவ்வாறானதொரு சூழலில் பத்து வருடங்களுக்கு பின்னர் ஏற்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் சிங்கள மக்களை நிலைகுலைய வைத்துவிட்டது. இந்த தாக்குதல் உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாத வலைப்புடன் தொடர்புபட்ட ஒன்று என்று, தெரிந்த பின்னர், சிங்களவர்களின் கோபம் முஸ்லிம் சமூகத்தின் மீதே திரும்பியது. இந்த கோபத்தை வாக்குகளாக மாற்றுவது தொடர்பில் பொதுஜன பெரமுன சிந்தித்தது. சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் கட்சிகள் அணிவகுத்திருந்ததை, பொதுஜன பெரமுனவினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். முஸ்லிம் வெறுப்பை தேர்தல் மூதலீடாக பயன்படுத்தியவர்கள் அனைவரும், இப்போது மீண்டும் ஈஸ்டரை கையிலெடுத்திருக்கின்றனர். இஸ்லாமிய வெறுப்பு இப்போது தென்பகுதி அரசியலின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தங்களின் வெற்றிக்கு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என எண்ணுபவர்கள் அனைவரும் இந்த விடயத்தில் அமைதி இழப்பார்கள். இவர்களை எவ்வாறு ராஜபக்சக்கள் சமாளிக்கப் போகின்றனர்?
-ஆசிரியர்