மாணவர்களுடைய பெற்றோர்களுக்கு அறிவித்து, அவர்கள் மறுமுனையில் நிற்கின்றோம், நீங்கள் அனுப்புங்கள் என்று கூறியதன் பின்னரே நாங்கள் மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்பினோம் என்று நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அம்பாறை(யுஅpயசய) – காரைத்தீவில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் பயணித்த 13 பேரில் 5 மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த அரபு கல்லூரி விடுத்துள்ள அறிக்கையில்
எங்களுடைய மத்ரஸா நிர்வாகமும் அதிபர் உட்பட அனைவரும் தீர்மானித்ததிற்கு அமைய அனர்த்தம் ஒன்று ஏற்படுகின்றன பட்சத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கக் கூடிய போதிய வசதிகள் எமது மத்ரஸாவில் ஏற்படுத்தப்படடிருக்கின்றன.இதனால் அவர்களை அங்கு தொடர்ந்து வைத்திருந்து பராமரிப்பது என முடிவு செய்திருந்தோம். ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக எமது காசிபுல் உலூம் அரபுக் கல்லூரியினுடைய மாணவர் விடுதி, வகுப்பறைகள், தொழுகை அறைகள் என்பன மழை நீரால் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
மலசலகூட குழிகள் கூட நிரம்பிக் காணப்பட்டன. இப்படி அடிப்படை வசதிகள் கூட மாணவர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் மீண்டும் நாங்கள் எங்களுடைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கூடி முடிவெடுத்தோம்.மாணவர்களைப் பாதுகாக்கின்ற அடிப்படையில் கல்லூரிக்கு விடுமுறை வழங்கி மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவை நாங்கள் எடுத்தோம்.
இதற்காக பிரத்தியேகமாக ஒரு பேருந்து வண்டியை வாடகைக்கு அமர்த்தி மாணவர்களைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். ஆனால் சம்மாந்துறைக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது காரைதீவில் இருந்த பாதுகாப்பு தரப்பினர் பேருந்து வண்டியில் செல்ல முடியாது என்றும் உழவு இயந்திரத்தின் ஊடாக போக்குவரத்து செய்யப்படுகின்றது என்றும் கூறியதன் விளைவாக நாங்கள் அதிலே அனுப்ப சம்மதித்தோம்.
இதனை மாணவர்களுடைய பெற்றோர்களுக்கும் அறிவித்து, அவர்கள் மறுமுனையில் நிற்கின்றோம் நீங்கள் அனுப்புங்கள் என்று கூறியதன் பிற்பாடுதான் நாங்கள் மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்பினோம்.ஆனால் இறைவனின் ஏற்பாடு அந்த உழவு இயந்திரம் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவே உண்மை நிலைமையாகும் என குறிப்பிட்டுள்ளனர்.