காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டியொன்று அடித்துச் செல்லப்பட்டதையடுத்து காணாமல் போயிருந்த மற்றுமொரு சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்படி அனர்த்தத்தில் காணாமல் போயிருந்த 8 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நிந்தவூர் பகுதியிலிருந்து மதரஸா பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்களுடன் சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உழவு வண்டியொன்று கடந்த 26ஆம் திகதி இரவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணித்தவர்களில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் சிலர் அன்றைய தினமே மீட்கப்பட்டனர்.
இதேவேளை காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு வண்டி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான மதரஸா பாடசாலையின் அதிபரும் ஆசிரியர் ஒருவரும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது குறித்த சந்தேகநபர்கள் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளமை சாட்சி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மதரஸா பாடசாலைக்கு அருகில் சென்று மாணவர்களைப் பேருந்தில் ஏற்றிக் கொண்டு மாவடிப்பள்ளி நோக்கி பயணித்தாக பேருந்தின் சாரதி சாட்சியளித்துள்ளார்.மழை காரணமாக அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்ததுடன் தம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாதெனப் பேருந்தின் சாரதி குறித்த மதரஸா பாடசாலையின் அதிபரிடம் அறியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து உழவு வண்டியில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு குறித்த மதரஸா பாடசாலையின் அதிபர் பயணித்துள்ளார்.குறித்த உழவு வண்டி கவிழும் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் பயணித்துள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.