தேர்தல் பரப்புரைகள் நிறைவுறுகின்றன. இன்னும் மூன்று தினங்களில் நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். தேர்தல் முடிவுகள் ஒன்றில் சாதாரணமான ஒன்றாக இருக்கலாம் அல்லது ஒரு வரலாற்று மாற்றமாக இருக்கலாம். எது நடப்பினும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பில் எந்தவோர் அதிசயமும் நடந்துவிடப் போவதில்லை. எப்போதும் போல, தமிழரின் வாழ்வு வழமைபோல் உப்புச்சப்பு இல்லாத நிலைமை என்று சொல்லக்கூடிய நிலையிலேயே தொடரப்போகின்றது. இந்த இடத்தில் எழும் கேள்வி – தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கும் வாக்களித்தால் என்ன அதிசயம் நிகழ்ந்தவிடப் போகின்றது – அதேபோல், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதால் என்ன அதிசயம் நடந்துவிடப் போகின்றது?
தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் தென்னிலங்கை வேட்பாளர்களில் சிலர் வெற்றி பெற்றிருக்கின்றனர் – சிலர் தோல்வியடைந்திருக்கின்றனர். வெற்றி பெற்றவர்கள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு மாறாக, அதனை கூர்மைப்படுத்தும் வேலைகளையே செய்திருக்கின்றனர். இது எதனை உணர்த்துகின்றது, நீங்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அவர்கள் எதைச் செய்ய நினைக்கின்றார்களோ, அதனையே செய்வார்கள். அவ்வாறாயின் தமிழ் மக்கள் வழங்கும் வாக்கின் பெறுமதி என்ன? கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் இதனைத் தெளிவாக நோக்கலாம் – தமிழ் மக்களின்
வாக்குகளை பெற்றவர்களில் மைத்திரிபால ஒருவரே அதிகாரத்துக்கு வந்தார்
ஆனால், அவரும் எதனையும் தமிழ் மக்களுக்காகச் செய்யவில்லை. இந்த ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தவரையில் யார் வெற்றி பெறுவார்
என்பதைக் கணிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. அநுரகுமார சிங்கள
மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகிறாரென கணிப்புகள் கூறுகின்றன.
கோட்டபாயவின் ஆதரவுத் தளம் முழுவதும் அநுரவுக்கு மாறியிருப்பதாகவும்
கூறப்படுகின்றது. இந்த நிலையில் அநுரகுமார வெற்றிபெற்றால் தோல்வி
யடையப் போகும் ஒருவருக்கு அளிக்கப்படும் தமிழ் வாக்குகளின் பெறுமதி என்ன? கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சஜித் பிரேமதாஸவுக்கே
தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். ஆனால், அவர் வெற்றிபெறவில்லை.
அப்போதும் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் அரசியல்வாதிகள்
கோரியிருந்தனர். இப்போதும் தமிழ் அரசு கட்சியின் ஓர்அணி, சஜித்
பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றது. சுமந்திரன் தேர்தல்
பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார். சஜித் வெற்றி பெறுவதற்கான
வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் கணிப்புகள் உண்டு.
ஏனெனில், சஜித் வெற்றிபெற வேண்டுமாயின் அவருக்கு தமிழ், முஸ்லிம்,
மலையக மக்களின் முழுமையான வாக்குகள் கிடைக்க வேண்டும் அதற்கான வாய்ப்பு தற்போதில்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய உணர்வுள்ள
மக்களுக்கு முன்னால் தமிழ் பொது வேட்பாளர் ஒரு தெரிவாக இருக்கின்றார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் அரசியல்
வாதிகளும் இருக்கின்றனர். அவர்களும் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் மூன்றாக பிரிகின்றது? இது
தமிழ் மக்களின் ஜனநாயக பலத்தை காண்பிப்பதற்கு உகந்த ஒன்றல்ல.
ஆனால், இதனை இலகுவாக சரி செய்ய முடியும் – எப்படி?
வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொது
வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊhடாக தமிழ் மக்களின் ஒற்றுமையை
காண்பிக்க முடியும். இதன்மூலம் தென்னிலங்கை அதிகார போட்டியிலிருந்து நாங்கள் விலகி நிற்க முடியும். அதிகாரத்துக்கு வருபவருடன் தமிழ் மக்களின் தலைவர்கள் பேச முடியும். இது ஒன்றுதான் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடிய புத்திசாலித்தனமானமுடிவாகும். ஏனைய முடிவுகள்
எவையுமே புத்திசாதுர்யமான முடிவுகளாக இருக்க முடியாது. அவைகளை முட்டாள்த்தனமான தீர்மானங்கள் என்று கூறுவதைத் தவிர, வேறு சொற்களை கண்டுபிடிப்பது கடினமானது.