ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விசாரணைகள் நிறைவடைந்தவுடன் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் சில வினாக்கள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்ததுடன், சம்பவம் தொடர்பில், வினாத்தாள் தயாரித்த நிபுணர்கள் குழுவின் இணக்கப்பாட்டுடன், குறித்த 03 கேள்விகளை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் கடந்த 17ஆம் திகதி தீர்மானித்தது.
இந்நிலையில் பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக நேற்று ஒன்று கூடிய பெற்றோர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.