கிளிநொச்சியில், ஏ-35 வீதியூடாக கசிப்பு கடத்திய இருவர், மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.
ஏ-35 பரந்தன் – முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை பகுதியில், வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிசார், சட்டவிரோதமாக கசிப்பு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும், முப்பதாயிரம் மில்லி லீற்றர் கசிப்பையும் மீட்டுள்ளனர்.
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில், நேற்று (14) மதியம், வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிசார், வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வழி மறித்து, விசாரணை செய்ய முற்பட்டனர்.
பொலிசாரின் சைகையை மீறி, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
தப்பியோடியவர்களை பொலிஸார் துரத்திச் சென்ற போது, முரசுமோட்டை அணைக்கட்டு வீதியில், மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றனர்.
இதன் போது, கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளையும், பொலித்தீன் பை ஒன்றிலும், பாடசாலை புத்தகப் பை ஒன்றிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பையும் மீட்டனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.