இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இங்கிலாந்தில் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியுள்ளன. டி20 தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. 2-ம் ஒருநாள் ஆட்டத்தை 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.
3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, முதல் இரு பந்துகளில் இரு விக்கெட்டுகளை இழந்தாலும் கடைசியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. பேர்ஸ்டோவ் 112 ரன்கள் எடுத்தார்.
பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 73 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்லும் கேரியும் அபாரமாக விளையாடி சதம் எடுத்தார்கள். மேக்ஸ்வெல் 108, கேரி 106 ரன்கள் எடுத்தார்கள். கடைசி ஓவரில் ஆஸி. அணி வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டன. ரஷித் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார் ஸ்டார்க். ஆஸி. அணி 49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து 3-ம் ஒருநாள் ஆட்டத்தையும் ஒருநாள் தொடரையும் வென்றது.
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை மேக்ஸ்வெல் வென்றார்.