கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்னை இருக்கிறது. அதனால், இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி இந்த பிரச்னையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். கலந்துரையாடலுக்கு பின்னரும் பாராளுமன்றத்திலும் அது தொடர்பான விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக கல்முனை பிரதேச செயலக தொகுதி தொடர்பான பிரச்னையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி தலையிடுவதாக வாக்குறுதி வழங்கியதாக இந்த சபையில் தெரிவிக்கப்பட்டது.
என்றாலும் கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்னை இருக்கிறது. அதனால் இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடுவோம். கலந்துரையாடல் ஊடாக இந்தப் பிரச்னையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும்.
இந்த விடயம் தொடர்பில் சாணக்கியன் எம். பி. மற்றும் ப. சத்தியலிங்கம் எம்.பியுடன் கலந்துரையாடி இருக்கிறேன். எமது பிரச்னை தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடி இருக்கிறேன். அதனால், இவ்வாறான பிரச்னைகள் – முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வோம் என தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் தற்போது வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு மேலதிகமாக எல்லை நிர்ணயம் தொடர்பாக பல குழுக்களும் இருக்கின்றன. இந்த விடயங்கள் தொடர்பான அனைத்தையும் கருத்தில்கொண்டு ஒரு தீர்மானத்துக்கு வருவோம் என நான் யோசனை முன்வைக்கிறேன்- என்றார்.