காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சில நிமிடங்களில் குஷ்பு, காங்கிரஸிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார். தன்னை மூத்த தலைவர்கள் ஒதுக்கியதாகக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு திமுகவில் உறுப்பினராக இருந்தார். அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் காங்கிரஸில் இணைந்தார். குஷ்புவுக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் என்கிற உயரிய பதவி வழங்கப்பட்டது. அதன்பின்னர் அவர் சில சமயம் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி விமர்சனத்துக்குள்ளானார்.
கட்சியிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளராக குஷ்பு இருந்தார். பின்னர் அவர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாகப் பேச்சு அடிபட்டது. குஷ்பு அதை மறுத்து வந்தார். ஆனால் நேற்றிரவு திடீரென அவர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். பேட்டியிலும் அவர் அளித்த பதில் வித்தியாசமாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டதாக காங்கிரஸ் அறிவித்தது.
இதையடுத்து காங்கிரஸிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“சாதாரண உறுப்பினரான என்னை மிகப்பெரிய செய்தித் தொடர்பாளர் பதவியில் அமர்த்தி சேவை செய்ய வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பில் காங்கிரஸ் கட்சிக்காக பல தளங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயல்பட்டதில் பெருமையடைகிறேன்.
நான் காங்கிரஸில் இணைந்த நேரம் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்து இக்கட்டான நிலையில் காங்கிரஸ் இருந்த நேரம். நான் கட்சிக்கு வந்தது பணத்துக்காகவோ, ஆதாயத்துக்காகவோ, பேர், புகழுக்காகவோ அல்ல.
காங்கிரஸ் கட்சியில் மக்களோடு தொடர்பில்லாத மேல்மட்டத் தலைவர்கள் சிலர் என்போன்ற மக்களுக்காக உண்மையாக உழைக்க முயன்றவர்களைச் செயல்பட விடாமல் அழுத்தம் கொடுத்தனர். மிக நீண்ட யோசனைக்குப் பின் கட்சியுடனான எனது தொடர்பைத் துண்டித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்.
இந்தக் கணம் முதல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து விலகுகிறேன். எனக்கு கட்சியில் நல்ல வாய்ப்பைக் கொடுத்த ராகுல் காந்தி, மற்ற மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் மீதான மரியாதை இன்றுபோலவே எனக்கு எப்போதும் இருக்கும்”.
இவ்வாறு ராஜினாமா கடிதத்தில் குஷ்பு தெரிவித்துள்ளார்.