காதலில் கூட தோற்றுள்ளேன். ஆனால், மீண்டும் ஒரு காதல் வருமா என்று தெரியாது என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் படம் ‘லாபம்’. இதில் நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பேட்டியளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். அதில் ‘லாபம்’, சம்பளம் குறைப்பு, கரோனா அச்சுறுத்தல், காதல் தோல்வி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.
அந்தப் பேட்டியில் ஸ்ருதி ஹாசன் கூறியிருப்பதாவது:
“கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. ஆனால், எப்போதுமே நான் அதிகமாக சம்பளம் வாங்கியதில்லை. ஆகையால், என்னைச் சம்பளம் குறைக்க வேண்டும் எனச் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
எனது வாழ்க்கையில் பல விஷயங்களைக் கடந்து தான் வந்துள்ளேன். காதலில் கூட தோற்றுள்ளேன். ஆனால், மீண்டும் ஒரு காதல் வருமா என்று தெரியாது. காதல் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம், வராமலும் போகலாம். சினிமா, இசை என மும்முரமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை”
இவ்வாறு ஸ்ருதி ஹாசன் தெரிவித்தார்.