பரந்தன் உமையாள்புரம் பகுதியில் உள்ள காணிகளுக்கு அடாத்தாக எல்லையிடும் முயற்சியில் வனவளத் திணைக்களத்தினர் நேற்று ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு குவிந்த பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனும் சம்பவ இடத்துக்குச் சென்றிருந்தார்.
மொத்தமாக 344 ஏக்கர் வரையான விஸ்தீரணமுடைய மயானம், நெல் காயவிடும் தளம், பொதுமக்களின் வீடுகள், வயல்கள் உள்ளடங்கிய காணிகளையே சுவீகரிக்க முயற்சித்துள்ளனர்.
இவற்றுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வைத்துள்ள மக்கள் கடந்த 30 வருடங்களாக வயல்களை விதைத்து வருகின்றனர். எனினும், தொடர்ந்து வயல் விதைத்தால் கைது செய்யப்படுவார்கள் என்று வனவளத்திணைக்களத்தினர் அச்சுறுத்தல் விடுத்தனர்.
இந்த விடயம் உடனடியாக பிரதேச செயலாளர், மேலதிக அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.