“மினுவாங்கொட கோரோனா பரவலையடுத்து கொரோனா தொற்றுள்ளோருடன் முதல்நிலைத் தொடர்புடையவர்களைக் கண்டறியும் செயற்பாடு நிறைவடைந்துள்ளது. எனினும் கொழும்பு மாவட்டத்தில் தொற்றுள்ள அல்லது சந்தேகத்துக்கு இடமான எவரும் இல்லை” என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சுதத் அமரவீர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மொனராகல, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டத்திலேயே கொரோனா பாதித்தோருடன் முதல்நிலைத் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலையடுத்து சுகாதாரத்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த முதல்நிலைத் தொடர்பாளர்கள் (தொற்றுள்ளவருடன் நேரடித் தொடர்புடையவர்கள்) அடையாளப்படுத்தலிலேயே இந்த முடிவு கிடைத்துள்ளது.
எனினும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொடர்புடையவர்களை அடையாளப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் கூறினார்.