தேசிய மக்கள் சக்தியின் அரிய வெற்றியைத் தொடர்ந்து, இலங்கைக்கான சீனத் தூதுவர், வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்திருந்தார். சீனத் தூதுவர் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்வது புதிய விடயம் அல்ல – ஆனால் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தொடர்ந்து அவரது விஜயம் இடம்பெற்றதால் சற்று கூடுதல் கவனத்தை பெற்றிருக்கின்றது.
அவரது விஜயத்தின் போது வடக்கு மக்களின் தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவர் தெரிவித்திருந்த கருத்துக்களே முக்கிய காரணம் – அதாவது, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்னும் கேள்விக்கு சீனத் தூதுவர் அளித்த பதில் – ‘நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்’. தமிழ்த் தேசிய அரசியலின் மையமாக வடக்கு மாகாணமே இருந்து வந்திருக்கின்றது.
அதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் என்றால் அது வடக்கு மாகாணம்தான் என்னும் புரிதலே தென்னிலங்கைக்கும் ராஜதந்திர சமூகத்திற்கும் உண்டு. அந்த அடிப்படையில்தான் அடிக்கடி வடக்கிற்கு ராஜதந்திரிகள் விஜயங்களை மேற்கொள்வதுமுண்டு. இவ்வாறானதொரு பின்னணியில் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மக்கள் பெரும்பான்மையாக ஜே.வி.பிக்கு வாக்களித்து, வடக்கு அரசியலிற்கு புதிய முகமொன்றை காண்பித்திருக்கின்றனர். தமிழ்த் தேசிய தரப்புக்களை ஒரு மாற்றாகக் கருதாமல் தேசிய மக்கள் சக்தியை ஒரு மாற்றுத் தலைமையாக கருதியிருக்கின்றனர்.
தமிழ்த் தேசிய தரப்புக்களாக தங்களை அடையாளப்படுத்தியிருக்கும் அனைத்து கட்சிகளுமே வடக்கில் தோல்வியுற்றியிருக்கின்றன. உதாரணமாக தமிழ் அரசு கட்சி பொருத்தமற்றது என்று கருதியிருந்தால் வடக்கு மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரித்திருக்க வேண்டும் அல்லது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை ஆதரித் திருக்கவேண்டும் ஆனால் அவ்வாறில்லாது முற்றிலும் மாறுபட்ட, கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளை முற்றிலுமாக எதிர்த்திருந்த தென்னிலங்கை கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவை ஆதரித்திருக்கின்றனர் – அரசியலில் நீண்ட அனுபமும் தொடர்புமுள்ள தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களை தோற்கடித் திருக்கின்றனர்.
இந்த விடயத்தை ஓர் அரசியல் மாற்றமாக புரிந்து கொண்டால், சீனத் தூதுவர் அவ்வாறு கூறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னை மற்றும் மனித உரிமைகள் விவகாரத்தில் கரிசனை கொண்டிராத அதே வேளை தென்னிலங்கையில் எந்த அரசாங்கம் இருந்தாலும் அவர்களுடன் இணைந்து செயற்படுவதை பிரதான கொள்கையாகக் கொண்டிருக்கும் சீனா, அவ்வாறு கூறாதிருந்தால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.
எனவே சீனத் தூதுவரின் கருத்திற்கு விளக்கங்கள் வழங்கி நேரத்தை வீணாக்காமல், தமிழ் சமூகம் அரசியலை எவ்வாறு உற்று நோக்க முற்படுகின்றது – குறிப்பாக இளைய தலைமுறையினர் மரபார்ந்த தமிழர் அரசியலிலிருந்து விலகிச் செல்கின்றார்களா? புதிய தலைமையொன்றை அவர்கள் தேடுகின்றார்களா – அவ்வாறனதொரு தலைமைத்துவத்தை ஏன் தற்போதுள்ளவர்களால் வழங்க முடியவில்லை? இந்தக் கேள்விகளுக்கு பதிலை தேடும் முயறசியில்தான் தமிழர் தரப்புக்கள் தங்களது நேரத்தை விரயம் செய்ய வேண்டும்.
நடந்து முடிந்த தேர்தலில் வாக்குகளை கூட்டிப் பார்த்து கதைகள் சொல்லும் ஆய்வாளர்கள் என்போர், தங்களின் கற்பனைக் குதிரைக்கு கடிவாளமிடுவதை விடுத்து, நிஜத்திற்கு திரும்புவது அவசியம். நடந்து முடிந்த தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகளுக்குமட்டுமான தோல்வியல்ல – மாறாக, வடக்கை தளமாகக் கொண்டிருக்கும் கருத்துருவாக்கிகள் ஆய்வாளர்கள் என்போரின் தோல்வியும்தான். முதலில் தங்களின் தோல்வியை ஒப்புக் கொள்ளும் போது மட்டும்தான், ஆரோக்கியமான உரையாடல்கள் உருவாகும்.