பான் இந்திய நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘லக்கி பாஸ்கர்’ எனும் திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லக்கி பாஸ்கர்’ எனும் திரைப்படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, அயன் சோஹன், கிஷோர் ராஜு வசிஷ்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
வங்கியில் பணியாற்றும் காசாளர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூரிய தேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் வழங்குகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” 1980 களில் தொடங்கும் இந்த கதை 1990 வரை நீடிக்கிறது. அந்தக் காலகட்டத்திய ஹைதராபாத் மற்றும் பாம்பே( மும்பை)யை நினைவுபடுத்தும் வகையில் அச்சு அசலாக அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. ஒரு வங்கி காசாளரின் வாழ்வை விவரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது” என்றார்.
இதனிடையே தமிழில் ‘ஓ காதல் கண்மணி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘சீதா ராமம்’ ஆகிய படத்தின் மூலம் பான் இந்திய நட்சத்திரமாகவும் உயர்ந்திருக்கும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அண்மையில் வெளியான ‘கல்கி 2898 கிபி ‘ திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும், இவரது நடிப்பில் தயாராவதால் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.