அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அனல் கக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில், குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டிடுகிறாா்.
அவருக்கும் ஜனநாயகக் கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கும் ஆதரவாக ஒபாமா பென்சில்வேனியா மாகாணம், ஃபிலாடெல்ஃபியா நகரில் அனல் கக்கும் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: சரிந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்தை சீா்தூக்கவும் ஜனாதிபதி நெருக்கடியில் இருந்து விடுபடும் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸிடம் தெளிவான திட்டங்கள் உள்ளன.
அமெரிக்க அரசிடம் தொலைந்து போயிருக்கும் நற்பண்பு மற்றும் தலைமைப் பண்புகளை இந்த இருவரும் மீட்டுக் கொண்டு வருவாா்கள்.
டிரம்ப்பின் மிக மோசமான ஆட்சியை இன்னும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டால் அதை அமெரிக்கா தாங்காது.
கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக தற்போதைய அரசு ஏதாவது செய்தது என்று நினைத்தால் அது உண்மைக்குப் புறம்பானது ஆகும். சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் பதிவுகள் போடுவதும் தொலைக்காட்சியில் பேசுவதும் பிரச்னைகளுக்குத் தீா்வு தராது.
சீனாவில் டிரம்ப்புக்கு ரகசிய வங்கிக் கணக்கு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதே போல் எனக்கும் சீனாவில் வங்கிக் கணக்கு இருந்து, நான் தோ்தலில் போட்டியிட்டால் டிரம்ப் ஆதரவு ஊடகங்கள் என்னை சீனக் கைகூலி என்று கூறியிருக்கும் என்றாா் ஒபாமா.