‘இருபதாவது திருத்தமும் அரசியல் விளைவுகளும்’ என்னும் தலைப்பில் இடம்பெற்ற ஆய்வரங்கில் 20வது திருத்தச்சட்டம் முடியாட்சியை ஏற்படுத்தும் ஒரு திட்டமென்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி கோட்டபாய ராஐபக்ச ஒரு முடியரசன் போன்று செயற்படுவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அந்த முடியரசனின் ஆசீர்வாதத்துடன்தான், விசேட அதிரடிப்படை புடைசூழ தினமும் சுமந்திரன் வலம்வந்து கொண்டிருக்கின்றார். நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் சற்று அமைதியடைந்த சுமந்திரன் மீளவும் தனது தலையை நிமிர்த்துவதற்கு 20வது திருத்தச்சட்டத்தை கையிலெடுத்திருக்கின்றார். சுமந்திரன் மட்டுமல்ல தேர்தலில் தோல்வியடைந்த அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு 20வது திருத்தச்சட்டம் தொடர்பில் அடிக்கடி பேசி வருகின்றனர். நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றது என அனைவருமே கவலைப்படுகின்றனர். இவ்வாறு கூறும் சிலர், ஆட்சி மாற்றத்தையும் அதன் பின்னரான ரணில்-மைத்திரி அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்தவர்கள் என்பதையும் இந்த இடத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கின்றது என்னும் வாதத்தின் அடிப்படையில்தான் 2015இல், தமிழர்களின் ஆதரவுடன் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 19வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒருவரிடம் முழு அதிகாரங்களும் குவிந்திருப்பதை தடுத்து, ஜனநாயக்ததை பாதுகாப்பதுதான் 19இன் இலக்கு என்றும் கூறப்பட்டது. இந்த அடிப்படையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பிரதமரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. அதே வேளை, இரட்டை குடியுரிமையுடையவர் தேர்தலில் பங்குகொள்ள முடியாது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லையை 35 ஆக அதிகரித்தமை. அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டமை. இவைகளெல்லாம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டவைகளா – அல்லது சிங்கள ஆளும் வர்க்கத்தின் பிரச்சினைகளை கையாளுவதற்காக கொண்டு வரப்பட்டவைகளா?
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 18வது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் மகிந்தவை நோக்கி அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. இதனை முறியடிக்கும் வகையில்தான் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து உடனடியாகவே 19வது திருத்தச்சட்டத்தின் மூலம் அவைகள் இல்லாமலாக்கப்பட்டன. அதே வேளை மீளவும் மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் சில ஏற்பாடுகள் புகுத்தப்பட்டன. இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக வருவதை தடுக்கும் ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டது. மகிந்த ராஜபக்ச மீளவும் ஜனாதிபதியாவதை தடுக்கும் நோக்கில்தான் கொண்டுவரப்பட்டது. அதே போன்று மகிந்தவின் குடுபத்தைச் சேர்ந்த கோட்டபாய பசில் ராஜபக்ச ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில்தான் இரட்டை குடியுரிமை விவகாரம் புகுத்தப்பட்டது. ஆனால் இறுதியில் மகிந்தவிற்கு பதிலாக கோட்டபாயவை ஜனாதிபதியாக்குவதற்குத்தான் 19வது திருத்தச்சட்டம் பயன்பட்டிருக்கின்றது.
இங்கு விடயங்களை ஆழமாக பார்த்தால் 18, 19, 20 வது திருத்தச்சட்டங்கள் எவையுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்படவில்லை. புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை காணும் நோக்கில் எந்தவொரு திருத்தச்சட்டமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை. இதில் 13வது திருத்தச்சட்டம் மட்டுமே விதிவிலக்கு. உண்மையில் இப்போது சுமந்திரன் போன்றவர்கள் பேச வேண்டியது 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலேயே அன்றி, 20வது திருத்தச்சட்டம் பற்றியல்ல. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை சரிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு துருப்புச் சீட்டாகவே இப்போது, அனைவரும் 20வதுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில், 20வதுடன் தமிழர்கள் மல்லுக்கட்டுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில் 19வது திருத்தச்சட்டம் தமிழர்களுக்கென்று தனித்துவமாக எதனையும் வழங்கவில்லை. தமிழர்களை, தமிழர்களாக அங்கீரிக்காத சீர்திருத்தங்கள் தொடர்பில் தமிழர்கள் எதற்காக மல்லுக்கட்டவேண்டும்?
-ஆசிரியர்