அரசியல் தலைவர்கள் என்போர் மாற்றங்களை உற்றுநோக்கப் பழக வேண்டும். மாற்றங்களை உற்றுநோக்குவதற்கு பின் நிற்பவர்கள் – தயக்கம் காட்டுபவர்களால் தாங்கள் தலைமை தாங்கும் கட்சியை முன்கொண்டு செல்ல முடியாது. கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் மூன்று வீத வாக்குகளை பெற்றிருந்த அனுரகுமார
திசாநாயக்க மாற்றங்களை துல்லியமாக உற்றுநோக்கி, அதற்கேற்ப அரசியலை முன்னெடுத்த காரணத்தினாலேயே இப்போது அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது. இன்று நாடு தழுவிய வகையில் புதிய அரசியல் கலாசாரத்திற்கான அலையொன்று உருவாகிவருகின்றது. இந்த அலையோடு மிதந்து செல்லும் உத்தி தொடர்பிலேயே தமிழ் தேசியக் கட்சிகள் என்போர் சிந்திக்க வேண்டும்.
அண்மையில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி வெளியிட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது – அதாவது, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு இம்முறை ஆசனம் இல்லை. இது ஒரு நல்ல பரிந்துரை. புதியவர்களை உள்வாங்கி, தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு இவ்வாறான பரிந்துரைகள் பயனுடையது. இதனை ஏனைய கட்சியினரும் பின்பற்றலாம். மூத்த உறுப்பினர்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும் என்பதல்ல இதன் பொருள் – மாறாக, அவர்களை தேசிய பட்டியிலில் உள்ளடக்கலாம். அவர்கள் புதியவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக இருக்க முடியும். தேர்தல் போட்டிக்கு தயார்படுத்தும் அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தை கருத்தில்கொள்ள வேண்டும். தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் ஏனைய கட்சிகள் அனைவரும் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாற்றங்களை அனுசரித்து நடக்க வேண்டும். காலம் மாறும் போது, அதற்கேற்ப சிந்திக்கவும் செயற்படவும் வேண்டியது கட்டாயமானது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் நீங்கலாக ஏனையவர்கள் அனைவரும் தங்களுடைய முகத்தை சற்று பின்னுக்கு வைத்துக்கொள்வது நல்லது. நாற்பது வருடங்கள் அரசியலில் இருந்தோம் என்று கூறும் பழைய பல்லவிகளை விடுத்து, கடந்த நாற்பது வருடங்கள் எதைச் சாதிக்க முடிந்தது என்னும் கேள்விக்கான பதிலிலிருந்தே தாங்கள் தொடர்ந்தும் இருக்கவேண்டுமா என்னும் கேள்விக்கான பதிலை உற்றுநோக்க வேண்டும்.
சில தேவையானவர்களை வைத்துக் கொண்டு புதியவர்களை உள்வாங்குவதன் ஊடாக, அரசியலை சுத்தம் செய்யும் போக்கொன்றை ஏற்படுத்துவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் முன்வர வேண்டும். இதனை மறுத்து செயல்பட எண்ணினால் நகைப்புக்கிடமான தேர்தல் பெறுபேறுகளையே பெற நேரிடும். தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவை தங்களின் முகங்களை முடிந்தளவு மாற்ற முயற்சிக்க வேண்டும். அண்மையி;ல் சி. வி.விக்னேஸ்வரன், அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்னும் முடிவை அறிவித்திருந்தார். இது வரவேற்கத்தக்க ஒரு விடயம். இது போன்ற செய்திகளையே ஏனைய மூத்த, உடல்ரீதியில் பலவீனமாக இருக்கும் அரசியல்வாதிகள் தங்களின் நிலையை மற்றவர்கள் தங்களுக்குச் சுட்டிக்காட்டும் நிலைக்கு ஆளாகாமல், மாற்றங்களின் முன்னோடியாக மாற வேண்டும். தமிழ் அரசியலில் மாற்றங்களின் ஆரம்பம் இவ்வாறுதான் நிகழும்.