தமிழ் கட்சிகளால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போவது…!

0
35

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வடக்கு – கிழக்கில் பெரும்பாலான சபைகளை அமைக்க வேண்டுமாயின், தமிழ் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு அவசியம். வடக்கு – கிழக்கில் பெரும்பாலான சபைகளில் தமிழ் அரசுக் கட்சி முன்னிலை வகித்தாலும்கூட ஆட்சியமைக்க வேண்டுமாயின் ஏனைய தமிழ் கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை. ஆனால், விட்டுக் கொடுப்புடன் சபைகளை அமைக்கும் முயற்சியில் இதுவரையில் தமிழ் கட்சிகள் மத்தியில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், தற்போது ஒவ்வொரு கட்சிகளும் சபைகளை அமைப்பதற்கான தந்திரோபாயங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஏட்டிக்குப்போட்டியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ் கட்சிகள் எவ்வாறு சபைகளை அமைப்பது என்பதில் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை எவ்வாறு கைப்பற்றலாம் என்னும் அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த அடிப்படையில் இதுவரையில் எதிரும்புதிருமாக மோதிக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் கட்சிகளோ மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் குறிப்பாக, கிழக்கு மாகாணம் தொடர்பில் எவ்வித கரிசனையுமின்றி தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் மோதிக் கொண்டவர்கள் பின்னர், பாராளுமன்றத் தேர்தலில் மேலும் பிளவுற்று இப்போது உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் விடயத்தில் மோதிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் ஒன்றுபட்டவர்கள்கூட பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றுபடவில்லை. அதற்கு சிவில் சமூகமாக தங்களை அடையாளப்படுதிக் கொண்டவர்களில் ஓர் அணியினரின் சதி முயற்சிகளும் முக்கிய காரணம் என்னும் விடயமும் இருந்தாலும்கூட, சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு கட்சிகளால் செயல்பட முடியாவிட்டால் அந்தக் கட்சிகளை மக்கள் ஆதரிப்பதால் என்ன பயன் உண்டு?

உள்ளூராட்சித் தேர்தலில் பிரிந்து நின்றதுபோலவே மாகாண சபைகள் தேர்தலையும் கட்சிகள் எதிர்கொள்ளுமாக இருந்தால் மாகாண சபை மூலம் கிடைக்கக்கூடிய எந்தவொரு நன்மையும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. முக்கியமாக, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அபிவிருத்தியில், சமூக முன்னேறத்தில் ஏனைய சமூகங்களுடன் போட்டியிட முடியாத கையறுநிலையிலேயே இருப்பார்கள். தமிழ் மக்களை சமூக, பொருளாதார ரீதியில் முன்னேற்றாத சுலோகங்களால் எந்தப் பயனும் இல்லை. இனிவரும் காலம் இன்னும் சிக்கலானதாக இருக்கப் போகிறது. இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியும் வடக்கு – கிழக்கில் கணிசமான செல்வாக்குடன் இருக்கிறது.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் முஸ்லிம்களை இணைத்துக் கொண்டு மாகாண சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சரை கருத்தில் கொண்டு தென்னிலங்கையுடன்தான் நிற்கும். இதுதான் கடந்த கால வரலாறு. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் கட்சிகள் தூரநோக்குடன் ஒன்றுமையாக செயல்படாதுவிட்டால், தமிழ் கட்சிகளால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.