முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தாக்கல் செய்த மனுவை மீண்டும் ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை, தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி கெஹெலிய ரம்புக்வெல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான உரிய தீர்மானத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது.