வடக்கு, கிழக்கின் பிரச்சினைகள் தொடர்பில் தென்னிலங்கை ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களில் இருப்பவர்களுக்கு போதிய புரிதல் இல்லையென்னும் ஒரு பார்வையுண்டு.
‘விடிய விடிய இராமாயணம் விடிந்த பின்னர் இராமர் சீதைக்கு என்ன முறையாமென்று’ பேச்சுவழக்கில் கூறுவார்கள்.
இதேபோன்றுதான், தென்னிலங்கை ஊடகங்களின் பார்வையும்.
இப்போதும் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் தங்களுக்கு விளங்கவில்லையென்று கூறும் சிங்கள அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.
தென்னிலங்கை ஊடகங்களின் மனோபாவத்தை புரிந்துகொள்வதற்கு அண்மைக்காலமாக வெளிப்படுத்தப்பட்டுவரும் ஒரு விடயமே போதுமானது.
அது ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பது’ போன்றது.
இப்போது, இலங்கை தமிழரசு கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஓர் அங்கத்துவ கட்சியாக இல்லை.
கூட்டமைப்பு தனியாக இயங்கிவருகின்றது.
இந்த நிலையில், தென்னிலங்கை ஆங்கில பத்திரிகைகளின் செய்திகளிலும் அவற்றில் வெளிவரும் கட்டுரைகளிலும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக சுமந்திரனே நோக்கப்படுகின்றார்.
சுமந்திரனின் கருத்துகளையே கூட்டமைப்பின் நிலைப்பாடாக ஆங்கில ஊடகங்கள் பதிவுசெய்கின்றன.
தென்னிலங்கை ஊடகங்கள் தமிழ் அரசியல் சூழலை எந்தளவுக்குப் புரிந்துவைத்திருக்கின்றன – புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
இந்த விடயத்தையே சரியாக அறிந்துகொள்ளாத தென்னிலங்கை ஊடகங்கள் தமிழர் அரசியல் விவகாரங்களை எவ்வாறு புரிந்துகொள்ளப்போகின்றன? ஆரம்பத்தில் மேற்கு நாடுகளின் தூதரகங்களின் அணுகுமுறையும் அவ்வாறுதான் இருந்தது.
சுமந்திரனின் கருத்துகளையே கூட்டமைப்பின் கருத்துகளாக நோக்கினர்.
ஒரு கட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளை அறிந்துகொண்ட பின்னரே அவர்களின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.
தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்பட்ட உடைவை இராஜதந்திர தரப்புகளும் உற்றுநோக்கியிருக்கின்றனர்.
அண்மையில், இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ் நிலை செயலர் விக்டோரியா நூலண்ட் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்தபோது, இந்த வேறுபாட்டை காணக்கூடியதாக இருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை அமெரிக்கத் தூகரகம் புரிந்துகொண்டிருக்கின்றது.
வழக்கத்துக்கு மாறாக, குறித்த சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து டி.பி.எல்.எவ். (புளொட்) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைக்கப்பட்டிருந்தார்.
தமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரன் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த பின்புலத்தில் சுமந்திரன்தான் அனைத்தும் என்னும் பார்வை மாறியிருக்கின்றது.
சம்பந்தன் செயல்படக்கூடிய நிலையிலிருந்த காலத்தில் சுமந்திரனுடன் பேசினால் போதுமானதென்னும் பார்வையே அமெரிக்க மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் மத்தியிலிருந்தது.
ஆனால் இப்போதும், இந்த விடயம் ஆங்கில ஊடகங்களில் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகின்றது.
ஆங்கில ஊடகங்கள் சுமந்திரனை கூட்டமைப்பின் பேச்சாளராக குறிப்பிடுவதும் அவரின் கருத்துகளை கூட்டமைப்பின் கருத்துகளாக முன்வைப்பதும் அடிப்படையிலேயே தவறானது.
கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை அறிய வேண்டுமாயின், தற்போது கூட்டமைப்பின் தலைவர்களாக இருக்கின்ற சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிறேமச்சந்திரன், சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்தவர்களுடன்தான் தொடர்புகொள்ள வேண்டும்.
அவர்களின் கருத்துகளையே கூட்டமைப்பின் கருத்துகளாக முன்வைக்கவேண்டும்.
தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டை அறிய சுமந்திரனுடன்தான் தொடர்புகொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் தமிழரசு கட்சியின் தீர்மானங்கள் அனைத்தும் அவராலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
ஒரு வகையில் சுமந்திரனே, தமிழரசு கட்சியின் நிழல் தலைவர்.
அந்த வகையில் சுமந்திரனின் கருத்துகளை தமிழரசு கட்சியின் கருத்தாக முன்வைப்பதில் தவறில்லை.