தொல்லியல் திணைக்களம் மீது, அநுர அரசாங்கத்திற்கும் நம்பிக்கை இல்லையாம் என்கிறார் பிரதியமைச்சர் அருண்

0
23

திருகோணமலை வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வெளிவிவகார பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாஸன், இம்ரான் மகரூப் ஆகியோரும் கலந்து கொண்டனர். வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நெறிப்படுத்தினார்.

கூட்டத்தில் முக்கிய பிரச்சினையாக வெருகல் -வட்டவன் பகுதியில் இம் மாதம் 6 ஆம் திகதி தொல்லியல் திணைக்களத்தின் பதாகை அனுமதியில்லாமல் காட்சிப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது. பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதேச அபிபிரத்தி குழு கூட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தில் இருந்து யாராவது வந்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பிய போது அங்கு யாருமே பிரசன்னமாகி இருக்கவில்லை. இதனால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தொல்லியல் திணைக்களத்தின் செயல்பாடு அரசாங்கத்தின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார். தொல்லியல் திணைக்களத்தின் நில அபகரிப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.