இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் அளவுக்கதிகமாகவே தடுமாறுகின்றனர். தமிழ் பொது வேட்பாளரை கண்டு நிலைகுலைந்து போயிருக்கின்றனர். இதனால், என்ன பேசுவது – எவ்வாறு பேசுவதென்று தெரியாமல் தடுமாறுகின்றனர்.
தமிழ் பொது வேட்பாளரால் கொழும்பி லுள்ள தமிழர்களுக்கு ஆபத்து என்னும் ஒரு புதிய கதையை சாணக்கியன் கூறியிருக்கின்றார். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டைக் கூறுவதால், எவ்வாறு கொழும்பிலுள்ள தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர்? ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்ஷ பூச்சாண்டி காண்பிக்கப்பட்டது. ஆனால், அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர், தமிழ் மக்கள் முன்னர் வழங்கிய ஆணையை இந்த முயற்சி குழப்பிவிடும் என்னும் கதை சொல்லப்பட்டது. அதனையும் எவரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது கொழும்பு தமிழ் மக்களுக்கு ஆபத்தென்று இன்னொரு கதை கூறப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக எதற்காக தமிழ் அரசுக் கட்சியின் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தளவு முட்டிமோதுகின்றனர்?
இதனை தமிழ் அரசுக் கட்சி தடுக்காமல் இருப்பது இன்னும் தவறானது. உண்மையில், தென்னிலங்கை வேட்பாளர்கள்தான் தமிழ் பொது வேட்பாளரை கண்டு அதிகம் கலக்கமடைய வேண்டும். ஆனால், தமிழ் அரசு கட்சியை சேர்ந்தவர்கள் ஏன் அதிகம் கலக்கமடைகின்றனர்? தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை தமிழ் அரசு கட்சியின் ஓர் அணியினர் ஆதரிக்கின்றனர் என்பது உண்மையாக இருந்தாலும்கூட, தமிழ் அரசு கட்சி உத்தியோகபூர்வமான முடிவின்றித் தடுமாறுகின்றது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை ஆதரிப்பதற்கு எதற்காக ஒரு கட்சி தடுமாற வேண்டும்? அந்தத் தடுமாற்றத்தின் பின்னணியை ஒரு தமிழ் குடிமகன் எவ்வாறு புரிந்துகொள்வது? தென்னிலங்கை வேட்பாளர்களை நோக்கி தமிழ் மக்களின் வாக்குகளை களவாடும் நோக்கம் வெற்றிபெற வேண்டுமாயின், தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழ் பொது வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று ஏற்கனவே சுமந்திரன் கூறியிருந்தார்.
ஒரு தமிழ் வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களின் வாக்குகள் திரளுவதை தோற்கடிக்க வேண்டுமென்னும் ஆசை எவ்வாறு தோன்றுகின்றது. நிச்சயமாக, தாங்கள் வெற்றிபெற வேண்டுமென்று எண்ணும் ஒருவரை வெற்றிபெறச் செய்வதற்காகவே தமிழ் பொது வேட்பளரை தோற்கடிக்க விரும்புகின்றனர்.
ஆனால், தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை முன்கொண்டு செல்வோரின் உறுதியே இப்போது சிலரின் பிரதான பிரச்னையாக இருக்கின்றது. இந்த பின்புலத்தில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படக்கூடாது என்பதிலேயே சுமந்திரன், சாணக்கியன் போன்றவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். முளையிலேயே இது கருகிவிடுமானால், இதனை தங்களின் அரசியல் நகர்வுக்கான முதலீடாகக் கொள்ளலாமென்றே அவர்கள் எண்ணுகின்றனர். இந்த பின்புலத்தில் நோக்கினால் தமிழ் மக்கள் பொதுச் சபையும் அரசியல் கட்சிகளினதும் ஒன்றுபட்ட முயற்சியின் தோல்விக்காக பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் ஓர் அரசியல் படிப்பினை உண்டு. அதாவது, தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு முன்னதா கவே அது பலவாறான அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது – பலரை திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. இந்த நிலையில், தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தமிழர்களின் அரசியல் மீண்டும் மிடுக்கு பெறும்
– தமிழ் பொது வேட்பாளரை நோக்கி மக்களின் வாக்குகள் திரண்டால் தமிழ்த் தேசிய அரசியல் புத்தெழுச்சி பெறும். இதனை நன்கு புரிந்திருப்பதால்தான் சுமந்திரன், சாணக்கியன் போன்ற தமிழ் அரசு கட்சியினர் இதனை முளையிலேயே கருக்க வேண் டுமென்று எண்ணுகின்றனர். அவதூறு, மற்றும் எச்சரிக்கை பிரசாரங்கள் மூலம் தங்களின் இலக்கை நிறைவு செய்யலாமென்று எண்ணுகின்றனர். ஆனால், இவர்களின் தடுமாற்றங்களும் செயல்பாடுகளும் ஒரு விடயத் தைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அதாவது, தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு முற்றிலும் சரியானது. காலத்துக்குத் தேவையானது. இதனை முன்கொண்டு செல்வோர் அரசியலில் சரியான பாதையில் பயணிப்பவர்களாவர்.