மட்டக்களப்பில், பிரதான தேர்தல் மத்திய நிலையமாகச் செயற்படும், மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலிருந்து, வாக்குச் சாவடிகளுக்கான, வாக்குப்பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
கல்குடா தேர்தல் தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும், மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலையங்களும், பட்டிருப்பு தொகுதியில் 122 வாக்களிப்பு நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் 442 வாக்களிப்பு நிலையங்களில் நாளைய தினம் வாக்குச் சேகரிப்பு இடம்பெறவுள்ளது. இவ் வாக்களிப்பு நிலையங்களுக்கு, பல கட்ட சோதனை நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்புக்களுடன், வாக்குப் பெட்டிகள் இன்று காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டன.
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் திருமதி ஜஸ்ரினா முரளிதரன், உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சுபியான் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகார் பண்டார ஆகியோர் வாக்குப்பெட்டிகளின் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 4 இலட்சத்து 49 ஆயிரத்து 686 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.