எதற்கும் அரசிடம் தீர்க்கமான தீர்வுகள் இல்லை. இனி ஒரு நெருக்கடி வருகிறதா? வந்தால் நாடு தாங்குமா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாட்டின் பொருளாதார சவால்கள் தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஆடை தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பல பிரபல ஆடை தொழில் முனைவர்கள் சத்தமில்லாமல் தம் தொழிற்சாலைகளை அயல் நாடுகளுக்கு கொண்டு போகிறார்கள். வேலை இழப்பு எற்படுகிறது.
உள்நாட்டில் பணபுழக்கம் குறைகிறது., 2024ம் ஆண்டு இலாபம் காட்டிய மின்சார சபை இன்று எப்படி ஆறு மாதத்தில் நஷ்டம் என்று கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை என்றார்.
தைத்த ஆடை ஏற்றுமதி துறை சார் ஆடை தொழிற்சாலை ஒன்று ஆயிரத்து நானூற்றுக்கு அதிகமான தொழிலாளரை (lay-off) விலத்தி விட்டார்கள். ஏற்கனவே பல பிரபல ஆடை தொழில் முனைவர்கள் சத்தம் இல்லாமல் தம் தொழிற்சாலைகளை இந்தியாவுக்கும், வியட்நாமுக்கும் கொண்டு போகிறார்கள்.
ட்ரம்ப் வரி விவகாரத்தின் பிரதிபலிப்பு இதுவாகும். அது இன்னமும் முடிவுக்கு வரவில்லை. “ட்ரம்ப் நிர்வாகத்துடன் நாம் பேசி விட்டோம். இதோ, ஸ்ரீலங்கா-யூஎஸ் கூட்டு அறிக்கை வருகிறது” என ஜனாதிபதி அநுரவே சொன்னார்.
ஆனால், “அதெல்லாம் இல்லை. நூற்றுக்கணக்கான நாடுகளுடன் ஒவ்வொன்றாக கூட்டு-அறிக்கை வெளியிட முடியாது. இலங்கை அரசின் விளக்கம் பிழை,” என நான் கேட்ட போது யூஎஸ் தரப்பில் இருந்து விளக்கம் தந்தார்கள் என்றார்.