இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தை தொடர்ந்து, இலங்கையில் பலரும் பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் குரலெழுப்பியிருந்தனர்.
இதில் முதன்மையானவர்கள் இலங்கை முஸ்லிம் கட்சிகளும் அமைப்புக்களுமாகும்.
அண்மையில், பலஸ்தீனத்திற்கு ஆதரவாக, அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜ.நா.வின் இலங்கை அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.
பொதுவாக உலகில் எந்தவொரு மூலையிலாவது, இஸ்லாமியர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போதும், இலங்கை முஸ்லிம்கள் உடனடியாகவே தங்களின் குரல்களை பதிவு செய்வது வழமையான ஒன்று.
இதற்கு பின்னாலிருப்பது மனிதாபிமானமா? இதற்கும் மேலாக, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால், இஸ்ரேல் இருந்ததாக வேறு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
கர்தினால் மல்கம் ரஞ்சித்தே, இதனை தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் மறுதினமே, கர்தினால் மல்கம் ரஞ்சித் அதனை மறுத்திருந்தார்.
இலங்கையின் முஸ்லிம் அரசியல் கட்சிகள் எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் துயரங்களுக்காக குரல் கொடுத்தவை அல்ல.
முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்பில் என்றுமே கண்டனங்களை அவர்கள் வெளியிட்டதில்லை.
இன்று பலஸ்தீனத்திற்காக மனிதாபிமான கண்ணீர் சிந்தும் அவர்கள், தமிழ் மக்களின் நியாயங்களுடன் என்றுமே தங்களை அடையாளப்படுத்தியதில்லை.
தமிழ் மக்களுக்காக பேசினால், தங்களது நலன்கள் பாதிக்கப்படும் என்னுமடிப்படையிலேயே, ஒவ்வொரு விடயங்களையும் திட்டமிட்டு முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.
இந்த பின்புலத்தில் நோக்கினால் அவர்களிடம் இருப்பது மனிதாபிமானம் அல்ல – அது இஸ்லாமிய சகோதரத்துவமாகும்.
எனவே மனிதாபிமானம் வேறு, இஸ்லாமிய சகோதரத்துவம் வேறு என்பதை, புரிந்து கொள்வதில் சிரமப்படவேண்டியதில்லை.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டுதான், நமது தமிழ் தேசியர்கள் பலஸ்தீனம் தொடர்பில் அபிப்பிராயங்களை முன்வைக்கவேண்டும்.
பலஸ்தீனத்தை எதிர்ப்பதால் அல்லது இஸ்ரேலை ஆதரிப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகின்றது – இதில் ஏன் நாம், நமக்குள் முட்டி மோத வேண்டும் – என்று ஒரு கேள்வி எழலாம்.
இந்தக் கேள்வியில் நியாயம் உண்டு ஆனால் இஸ்ரேலை எதிர்த்து, நாம் ஏன் பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும் – அவ்வாறான நிலைப்பாட்டை
எடுப்பதால், நமது மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? ஆனால் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதாயின் அதனை தெளிவாக முன்வைக்க வேண்டும்.
இஸ்ரேல் என்பது வெறுமனே இஸ்ரேல் மட்டுமல்ல – அது உலகளாவிய யூதர்கள் சம்பந்தப்பட்டது.
அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் ‘யூத லொபி’ என்று ஒன்றுண்டு.
அந்தளவிற்கு அவர்கள் ஆளுமையும் செல்வாக்கும் மிக்க ஒரு சமூகம். அவ்வாறானதொரு சமூகத்தை எதிர்த்து, எதற்காக பலஸ்தீனத்தின் பக்கமாக நம்மை
அடையாளம் காண்பிக்க வேண்டும்? நாம் எடுக்கும் நிலைப்பாடுகளானது, இன்றில்லாவிட்டாலும் கூட – என்றோ ஒருநாளில், நமக்கு நன்மையளிப்பதாக இருக்கவேண்டும்.
ஒரு வேளை, நன்மையில்லாவிட்டாலும் கூட, இடம்பெறும் பாதகமான நிலைமையை தடுப்பதற்காவது பயன்படலாம்.
வெளியுலக விவகாரமொன்றில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் போது – இந்த அடிப்படையில்தான் தீர்மானங்களை எடுக்க வேண்டும் – நம்மை உலகின் முன்னால் காண்பிக்க வேண்டும்.
நாம் எவ்வாறு நம்மை வெளிப்படுத்துகின்றோமா – அது தான் நமது உலக நிலைப்பாடாகும்.
நமது உலக நிலைப்பாடு எப்போதுமே தூர நோக்கம் கொண்டதாகவும், தந்திரம் மிக்கதாகவும் இருக்க வேண்டும்.
அவ்வாறு சிந்தித்தால் ஈழத் தமிழர்கள் பலஸ்தீனத்தின் பக்கமாக தங்களை அடையாளப்படுத்துவது சரியா அல்லது தவறா என்பதை புரிந்து கொள்ள முடியும்.