28 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பழைய பாணியில் மகிந்த?

வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டின் பொருளாதார சரிவுக்கு பின்னால் வெளிநாட்டு சக்திகள் இருக்கின்றன எனவும் அவைகளின் உள்நாட்டு முகவர்கள் இப்போதும் செயல்திறனுடன் இருக்கின்றனர் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் கேள்வியெழுப்புகின்றனர்.
எல்லாவற்றை விடவும் நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான தென்றும் மகிந்த தெரிவித்திருக்கின்றார்.
மகிந்தவின் ‘மெதமுல்ல’ தந்திரோபாயம் மீளவும் எட்டிப்பார்க்கின்றது.
2015இல் மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டபோது, அதனை வெளிநாட்டு சதியென்று கூறிக்கொண்டே மீளவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆட்டத்தை ஆரம்பித்தார்.
முதலில் இந்திய உளவுத்துறையான றோவின்மீது குற்றம்சாட்டினார்.
சில நாட்களில் அமெரிக்க உளவுத்துறையான சி. ஐ. ஏ. மற்றும் பிரித்தானிய உளவுத் துறையான எம். ஐ – 6மீது குற்றம்சாட்டினார். இதன்மூலம் விடுதலைப் புலிகளை தோற்கடித்து சிங்கள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய தன்னை வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டு தோற்கடித்து விட்டதான கதையொன்றைக் கூறினார்.
இதுவே அவரின் பிரதான பிரசாரமாக இருந்தது.
இந்தப் பிரசாரத்துடன்தான், தனது மெதமுல்ல இல்லத்திலிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆட்டத்தை ஆரம்பித்தார்.
ரணில் – மைத்திரி அரசாங்கத்தின் உள்முரண்பாடுகளும் – குறிப்பாக, ரணில் – மைத்திரி அதிகார மோதல்களும் மகிந்தவின் ஆட்டத்துக்கு வலுச் சேர்த்தது.
இந்தப் பின்னணியில்தான் ஈஸ்டர் தாக்குதலும் இடம்பெற்றது.
ஈஸ்டர் தாக்குதல் சிங்கள மக்கள் மத்தியில் மீளவும் தீவிரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது.
இவை அனைத்தும், கோட்டாபயவின் வெற்றிக்கு வழிவகுத்தது.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக ராஜபக்ஷக்களின் செல்வாக்கு வீழ்ச்சியுற்றிருக்கின்றது.
பொதுஜன பெரமுன கட்சியில் உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் மீளவும் ராஜபக்ஷக்களின் செல்வாக்கைத் தூக்கி நிறுத்துவதற்கு, அதேபழைய துருப்புச்சீட்டையே மீளவும் கையிலெடுத்து இருக்கின்றார்.
அதாவது, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தங்களுடைய தவறுகளல்ல காரணம்.
உண்மையான காரணம் வெளிநாட்டு சக்திகளே.
அவைகள் சிங்கள மக்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்க முற்படுகின்றன.
இந்தத் துருப்புச் சீட்டை வீசுவதன் மூலம் தென்னிலங்கையின் சிங்கள தேசியவாத சக்திகள் அனைவரையும் தங்களை நோக்கி மீளவும் ஒருங்கிணைக்க முடியுமென்று மகிந்த ராஜபக்ஷ கணக்குப் போடக்கூடும்.
தென்னிலங்கை பௌத்த – சிங்கள தேசியவாத சக்திகளை மீளவும் ராஜபக்ஷக்களை நோக்கி ஒருங்கிணைத்தால் ஆட்சியை கைப்பற்ற முடியாவிட்டாலும்கூட, 2015இற்கு பின்னர் பலமான எதிரணியாகவிருந்து ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை தடுத்தது போன்றதொரு செயல்பாட்டை மீளவும் செயல்படுத்தமுடியும்.
தென்னிலங்கையின் சிங்கள அரசியல் வரலாற்றில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு வலுவான துருப்புச் சீட்டாக, வெளியாரின் மீதான எதிர்ப்புக்கு முக்கியபங்குண்டு.
குறிப்பாக இந்திய எதிர்ப்பு சிங்கள தேசிவாதத்துடன் பின்னிப்பிணைந்திருக்கும் ஒன்றாகும்.
இதனைக் கருத்தில் கொண்டுதான், 2015இல் தேர்தல் தோல்விக்கு பின்னால் இந்திய உளவுத்துறை இருந்ததாக மகிந்த உடனடியாகவே குறிப்பிட்டிருந்தார்.
வீழ்ச்சியுற்ற தங்களின் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கு அதே பழைய மெதுமுல்ல பாணியை கைக்கொள்ள மகிந்த முயற்சிக்கின்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles