31 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரதமர் மோடிக்கு எதிராக சிறப்புரிமை தீர்மானம் – மாநிலங்களவையில் கே.சி.வேணுகோபால் தாக்கல்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் மாநிலங்களவையில் சிறப்புரிமை தீர்மானம் தாக்கல் செய்தார்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அவமதிக்கும் விதமாக இழிவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான வேணுகோபால் சிறப்புரிமை தீர்மானத்தினை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்த பிப். 9ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசிய உரையினை அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

 குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பிரதமர் மோடி,”காங்கிரஸ் ஆட்சியில் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. 356-வது பிரிவைப் பயன்படுத்தி, பல்வேறு மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 50 முறை 356-வது பிரிவைப் பயன்படுத்தினார்.

அவையில் இருக்கும் திமுக நண்பர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்தது யார்? அப்போதைய காங்கிரஸ் அரசு என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள். எம்ஜிஆர் ஆட்சியையும் காங்கிரஸ் அரசே கலைத்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 90 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன” என்று விமர்சித்திருந்தார்.

மத்திய அரசு நேருவின் பங்களிப்பு குறித்து குறிப்பிடுவதில்லை என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டிற்கும் பிரதமர் அப்போது பதில் அளித்திருந்தார். “நான் சில செய்தித்தாள்களில் வாசித்தேன். நான் அதை இன்னும் சரிபார்க்கவில்லை யென்றாலும் அந்த அறிக்கையின் படி, 600க்கும் அதிகமான அரசுத் திட்டங்கள் காந்தி- நேரு குடும்ப பெயர்களிலேயே இருக்கின்றன.

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தவர் நேரு. நேருவின் பெயரை நாங்கள் விட்டிருந்தால் அதனை சரி செய்து விடுவோம். ஆனால், அவரது குடும்பப் பெயரை வைத்துக்கொள்ள, அவரது வாரிசுகள் ஏன் தயங்குகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. பெயருக்குப் பின்னால் நேருவினுடைய பெயரை வைத்துக்கொள்வதால் ஏதாவது அவமானம் ஏற்படுமா? என்ன மாதிரியான அவமானம் அது? அத்தகைய பெரிய ஆளுமையின் பெயரை அவரது குடும்பத்தினரே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாதபோது, எங்களை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்” என்று நரேந்திர மோடி பேசியிருந்தார்.

இதைச் சுட்டிக்காட்டி, பிரதமருக்கு எதிராக சிறப்புரிமை தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டிற்கு எதிரான காங்கிரசின் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. தனது லண்டன் பேச்சுக்காக ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்றத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles