26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொதுஜன பெரமுனவினர் அமைச்சுப் பதவிகளுக்கு போட்டி – உதய கம்மன்பில

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என குறிப்பிடும் ஆளும் தரப்பினர் அமைச்சுக்களை பெற்றுக்கொள்ள போட்டிப் போட்டுக் கொள்கிறார்கள்.

பொதுஜன பெரமுனவின் முன்னிலை உறுப்பினர்களுக்கு எதிர்வரும் நாட்களில் அமைச்சு பதவிகள் கிடைக்கப்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் பொருளாதார மீட்சிக்கான மாற்றுத்திட்டங்களை முன்வைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுவது அடிப்படையற்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொருளாதார மீட்சிக்கான கொள்கை திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்தோம்,பொதுஜன பெரமுனவின் எதிர்ப்பினால் நாங்கள் முன்வைத்த யோசனைகள் புறக்கணிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்தல்,வரி அதிகரித்தல் உள்ளிட்ட யோசனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்குமே தவிர இந்த தொழிற்துறையினர் மீது வரி சுமையை அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் குறிப்பிடாது.

அரசாங்கத்தின் முறையற்ற வரிக் கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டம் நாளாந்தம் தீவிரமடைந்து செல்கிறது.தொழிற்சங்க போராட்டம் தோல்வி என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

போராட்டத்தில் யார் வெற்றி என்பதை அரசாங்கம் தீர்மானிக்கிறதே தவிர உண்மை பிரச்சினைகளுக்கு பொறுப்புடன் தீர்வு காண்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.கப்பல் ஊடாக டொலர் இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் முன்னிலை வகித்தார்கள், அவர்கள் தான் தற்போதும் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும் என குறிப்பிடும் ஆளும் தரப்பினர் தமக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கவில்லை என அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்கள்.

எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னிலை உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு மக்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிடும் ஜனாதிபதி அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை விஸ்தரிக்க முயற்சிப்பது வெறுக்கத்தக்கது என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles